சென்னை உள்பட பல இடங்களில் மின்தடை: கருப்பு ஆடுகளாக இருந்து மெத்தனப்போக்கு கடைபிடிப்பு: ஊழியர்கள் மீது அமைச்சர் நிர்மல்குமார் சாடல்

 

சென்னை: மின்வாரியத்தில் பணியாற்றும் ஒரு சிலர் கருப்பு ஆடுகளாக இருந்து மெத்தனப் போக்கை கடைபிடிப்பது மின்தடைக்கு காரணம் என ஊழியர்கள் மீது மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் 80வது ஆண்டு விழாவில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மின் தட்டுப்பாடு ஏதும் தமிழகத்தில் இல்லை. சில இடங்களில் லோடு குறைவாக இருக்கும் போது பியூஸ் ஆப் ஆவதும் சில இடங்களில் லோடு அதிகமாகும் போது ட்ரிப்பிங் ஏற்படுவதும் டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் பழைய கேபிள்களில் ஏற்படும் பழுதுகளுமே மின்தடைக்கு முக்கிய காரணம். கோடைகாலத்தின் திடீர் வெப்ப உயர்வால் மின்சாரப் பயன்பாடு உச்சத்தைத் தொட்டுள்ளது. மேலும் சென்னையில் மின்தடை புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் ரேபிட் இன்ஜினியர் டீம் பிரத்யேக வாகனங்களுடன் கூடிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டு நேற்று இரவு முழுவதும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டன.

தலைமைப் பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக இரவு முழுவதும் தூங்காமல் துணை மின் நிலையங்களில் நேரடியாக ரோந்து மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கோவை, கரூர் போன்ற மாவட்டங்களிலும் பழுதுகள் சரிசெய்யப்பட்டுள்ளன.

மேலும் வாரியத்தில் பணியாற்றும் 99 சதவீத ஊழியர்கள் சிறப்பாகச் செயல்படும் வேளையில், ஒரு சிலர் கருப்பு ஆடுகளாக இருந்து மெத்தனப் போக்கைக் கடைபிடிப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒருசில தனிநபர்களின் தவறுகளாலும் யாருடைய தூண்டுதலின் பேரிலோ திட்டமிட்டு மின்சார தடைகள் ஏற்படுத்தப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. அவ்வாறு தவறிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இரவுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் மின்சார வாரியத்தின் 24 மணி நேர உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம். அங்கு 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஊழியர்கள் களத்துக்கு சென்று இருக்கும்போது தொலைபேசியை எடுக்க முடியாமல் போகலாம் என்பதால் உதவி மையத்தை தொடர்பு கொண்டால் உடனடியாக ஆன்லைனில் பிரச்னை எடுத்துக்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்.

சோலார் மின் உற்பத்தியில் இதற்கு முன் அமைப்புகளில் நிலவிய பல முறைகேடுகள் நிறுத்தப்பட்டு, தவறிழைத்த இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான ஆய்வு இல்லாமல் வழங்கப்பட்ட சுமார் 2,000 முதல் 3,000 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார்.

Related Stories: