அரசு குடியிருப்பில் 10 கிலோ பதுக்கல்; கஞ்சா விற்ற அரசு அதிகாரியின் மகன் கைது: வேலூர் போலீசார் விசாரணை

 

 

வேலூர், மே 22: வேலூரில் பாழடைந்த அரசு குடியிருப்பில் 10 கிலோ கஞ்சா பதுக்கி விற்பனை செய்த சென்னையில் உள்ள அரசு அதிகாரியின் மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியில் அரசு குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் பெரும்பாலான வீடுகளில் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் இந்த குடியிருப்புகளில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசு குடியிருப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, குடியிருப்பின் அருகே தங்கியுள்ள வாலிபர் கஞ்சா பதுக்கி விற்பதாக தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கிருஷ்ணா(30) என்பதும், சென்னையில் வீட்டு வசதி வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் ராஜா என்பவரது மகன் என்பதும் தெரியவந்தது. கிருஷ்ணா படிக்கும்போது, கஞ்சா பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது, ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து நண்பர்கள் மூலம் குடியிருப்பில் பதுக்கி விற்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது பாலூர், சித்தூர் காவல் நிலைய எல்லையில் கஞ்சா விற்றதாக வழக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? யார் யாருக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டுள்ளது? சென்னையிலும் இந்த கும்பல் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: