பிளஸ்2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று பதிவிறக்கம் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு

வேலூர்: பிளஸ்2 தேர்வெழுதிய மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் பட்டியலை இன்று காலை 11 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிவிக்கை பகுதியில் சென்று HSE-II Year March-2026-State-ment of Marks பக்கத்தில் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் நேற்று காலை 11 மணி முதல் வரும் 16ம்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அரியர் தேர்வர்களும் விடைத்தாள் நகல் கோரி இந்த நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் வேண்டும். பெறுவதற்கான கட்டணம் ரூ.275 ஆகும். தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் குறித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: