குடியாத்தம் அருகே பழைய வீட்டை இடித்த நிலையில் காடு புறம்போக்கு நிலம் எனக்கூறி புதிய வீட்டை இடிக்க உள்ளனர்: ராணுவவீரர் குடும்பத்துடன் குறைதீர்வு கூட்டத்தில் மனு

வேலூர், மே 12: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த மார்ச் 15ம் ேததி முதல் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக புகார் பெட்டியில் மக்கள் மனு அளித்தனர். இந்நிலையில் தேர்தல் முடிவடைந்து நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதால் நேற்று வழக்கம்போல் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, ஆர்டிஓ செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.

கூட்டத்தில், குருவராஜபாளையத்தை சேர்ந்த பூங்கான் என்ற முதியவர் அளித்த மனு:
எனது பெயரில் உள்ள பட்டாவை, என் மகன் அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
குடியாத்தம் அடுத்த பரசுராமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாந்தா என்ற பெண் அளித்த மனு: செட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த நபரிடம் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு, சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி வந்தேன். என்னை போன்றே 105 பேர் அவரிடம் சீட்டு கட்டி வந்தோம். ஆனால் அந்த நபர் பணத்தை தராமல் ரூ.4.45 லட்சத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

கொசப்பேட்டை அருண்ராஜ் அளித்த மனு: எனக்கு தவறான சிகிச்சை அளித்து பெண்ணாக மாற்றிவிட்டனர். இதனால் அனைவரும் என்னை கேலி, கிண்டல் செய்வதுடன், எனக்கு பாலியல் தொல்லையும் தருகின்றனர். எனது பெற்றோரும், என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டனர். எனவே நான் அரசு விடுதியில் தங்க அனுமதி வழங்க வேண்டும்.பகுஜன் சமாஜ் தூய்மை தொழிலாளர்கள் சங்கத்தினர் அளித்த மனு: வேலூர் மாநகராட்சியில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.410 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய விலைவாசிக்கு ஏற்ப கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.

சதுப்பேரி ரேகா என்பவர் அளித்த மனு:எனது கணவர் என்னை வீட்டில் சேர்க்கவில்லை. எனக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். எனது கனவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்.
அணைக்கட்டு கெங்கசாணிகுப்பம் அருண்குமார் அளித்த மனு: மாற்றுத்திறனாளியான நான் வறுமையில் 2 பெண் குழந்தைகளை வைத்துள்ளேன். எனக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் யுவக்குமார் தனது குடும்பத்தினருடன் அளித்த மனு: நான் 7 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறேன். காடு புறம்போக்கு நிலம் எனக்கூறி எனது பழைய வீட்டையும், புதிதாக கட்டிய கழிவறையும் கடந்த 2023ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவு எனக்கூறி இடித்துவிட்டனர். இதுதொடர்பாக ஆர்டிஐ மூலம் தகவல்களை கேட்டேன். 3 ஆண்டுகள் ஆகியும் தகவல் கொடுக்கவில்லை. மீண்டும் நீதிமன்ற உத்தரவு எனக்கூறி பட்டா நிலத்தில் உள்ள புதிய வீட்டையும் இடிக்க வருவாய் துறையினர் முயன்று வருகின்றனர். கடந்த 1916ம் ஆண்டு முதல் இந்த நிலம் புஞ்சை நிலமாகதான் இருந்தது. எதன் அடிப்படையில் காடு புறம்பபோக்கு நிலம் என கூறுகிறார்கள் என தெரியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ேவலூர் பாஜக நிர்வாகிகள் அளித்த மனு: வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடமும் ரூ.30 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தபோது பெட்டியில் அளித்த மனுக்களை பரிசீலித்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூளை முடக்கு வாதத்தினால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, காதொலி கருவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: