குடியாத்தம், மே 13: எட்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மூட்டை தூக்கும் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனையறிந்த பெற்றோர்கள் பெரியதாக கண்டு கொள்ளவில்லையாம். கடந்த 10ம் தேதி இரவு சிறுமி தனது அறையில் வழக்கம்போல் தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை திடீரென சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது, சிறுமிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது தெரியவந்தது. உடனே பெற்றோர் சிறுமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் சிறுமியை கர்ப்பமாக்கிய கார்த்திகேயபுரம் கிராமத்தை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியான பாலாஜி(33) என்பவரை கைது செய்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான பாலாஜிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
