சென்னை: சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: விசிகவும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா வெளிப்படையான அழைப்பை முன்வைத்தார். பெரும்பான்மையோரின் கருத்தின் அடிப்படையில் இந்த அமைச்சரவையில் இடம்பெறுவது என்று முடிவை எடுத்துள்ளோம். வன்னிஅரசு, ஜோதிமணி ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில் வன்னி அரசு பெயரை பரிந்துரைப்பது என்று முடிவு எடுத்துள்ளோம்.
இன்றைக்கு அமைச்சரவையில் இடம் பெறுகிறோம். கடந்த 8ம் தேதி இரவு நடத்திய இணையவழி கூட்டத்தில் 32 பேரில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். சிலர் தலைவர் என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுகிறோம் என்று கூறினர். மேலும் பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன் ஆகியோருடன் கலந்து பேசி வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்று உறுதிப்படுத்தினோம். ஆனால் கட்சியின் முன்னணி தலைவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் தவெக தரப்பில் இருந்து வெளிப்படையான அழைப்பு வந்ததை தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறினர். தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி முறை என்பது அறிமுகமாகிறது. எனவே தவெக விடுத்த அழைப்பையும் கணக்கில் கொண்டு கட்சியின் நீண்ட கால கனவையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். கூட்டணியில் இடம் பெறுகிறோமா, இல்லையா என்பதை ஓரிரு நாட்களில் முறையாக அறிவிப்போம். இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்
அதேபோல இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டதிலும் தமிழக அமைச்சரவையில் பங்கேற்பது என்று முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வன்னி அரசு, ஷாஜகான் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்கின்றனர்.
