விஜய் அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கவில்லை எஸ்.பி.வேலுமணி அணிக்கு பெரும் ஏமாற்றம்: மீண்டும் எடப்பாடி பக்கம் தாவ திட்டம்

 

சென்னனை: விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் மீண்டும் எடப்பாடி பக்கம் தாவ எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.
விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், திரைமறைவு பேச்சுவார்த்தை மற்றும் குதிரை பேரத்தின் மூலம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை உடைத்துக் கொண்டு எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். இதனால் அதிமுக இரண்டாக உடைந்துள்ளது. கட்சி கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டதாக கூறி, அவர்களின் எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் மற்றும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில், அதிமுகவை உடைத்துக் கொண்டு தனி அணியாக செயல்பட்டு வரும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 அல்லது 8 பேருக்கு தமிழக அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று விஜய் உறுதி அளித்து இருந்தார். இந்த உறுதிமொழியை ஏற்றுதான் அதிமுகவை உடைத்துக் கொண்டு 25 எம்எல்ஏக்களும் வெளியே வந்தனர்.

ஆனால், நேற்று தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் அதிமுகவின் அதிருப்தி அணியில் இடம்பெற்றுள்ள எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விஜய்யின் பேச்சை நம்பி தமிழகத்தின் 30 ஆண்டுகளாக ஆண்ட கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த, அதிமுக எம்எல்ஏக்கள் இன்று நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம், தமிழக அமைச்சரவையில் முதல்வரையும் சேர்ந்த 34 அல்லது 35 பேர் மட்டுமே அமைச்சர்களாக தொடர முடியும். தற்போது 33 அமைச்சர்கள் தமிழக அரசில் இடம் பெற்றுவிட்டனர். இனி, ஒரு காலமும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இதற்கு, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பும் ஒரு காரணம் என்றாலும், உண்மையில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களில் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இவர்களை அமைச்சரவையில் சேர்த்தால் தவெகவுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று விஜய் கருதுவதால்தான் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழக ஆளுநர் அர்லேகரும் மறுத்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், காமராஜ், லீமா ரோஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களின் அமைச்சர் பதவி கானல் நீராகி விட்டதாக தமிழக மக்களின் கேலிக்குள்ளாகியுள்ளனர்.

அதே நேரம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகம் அடைந்துள்ளனர். எஸ்.பி.வேலுமணியை நம்பி, தாய் கட்சியை பகைத்துக் கொண்டதால் தற்போது, மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சேர சில எம்எல்ஏக்கள் தூது அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக ஆட்சியில் இடம் கிடைத்தால் மட்டுமே தங்களுக்கு ஆதாயம் என்ற நிலையில் அவர்கள் இருந்தனர்.

தற்போது, விஜய் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பை பை காட்டி இருப்பதால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பக்கம் உள்ள எம்எல்ஏக்கள் விரைவில் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவுவது உறுதியாகி உள்ளது. இதனால், அடுத்தடுத்த நாட்களில் அதிமுகவில் பல்வேறு முக்கிய சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளது.

* வேலுமணி, சண்முகம் ஆலோசனை: கே.சி.வீரமணி, லீமாரோஸ் ஆப்சென்ட்

தவெக அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததால், 25 அதிமுக எம்எல்ஏக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து நேற்று சென்னையில், சி.வி.சண்முகம் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி அணியினர் கூடி ஆலோசனை நடத்தினர். ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தில் கே.சி.வீரமணி, லீமாரோஸ் கலந்து கொள்ளவில்லை.

மேலும், கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், விஜய் தரப்பினர் நம்மை, நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக புலம்பியதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. மீண்டும் எடப்பாடி அணியில் சேருவது குறித்தும், தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து தக்க பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற பலரும் ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

Related Stories: