போபால்: ஜப்பானில் நடைபெறவுள்ள யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி, கேப்டன் கேதன் குஷ்வாஹா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ககமிகாஹரா நகரில், வரும் 29ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை 18 வயதுக்கு உட்பட்ட ஆடவர் மோதும், யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கு கேப்டனாக முன்கள வீரர் கேதன் குஷ்வாஹா செயல்படுவார்.
இந்திய அணியில் கோல் கீப்பர்களாக சவான் குமார், ஆயுஷ் ரஜக் களமாடுவர். தடுப்பாட்டக்காரர்களாக அன்ஷ் பஹுத்ரா, அர்மான் சொரெங், ஆஷிஷ் தனி புர்தி, அர்ஷ்திப் சிங், அவி மனிக்புரி, ரோமித் பால், நடுகள வீரர்களாக ராகுல் யாதவ், பிரேம் சந்த் சோய், வரிந்தர் சிங், கரண் கவுதம் ஆடுவார்கள். ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, வரும் 29ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் கஜகஸ்தான் அணியுடனும், 31ம் தேதி நடக்கும் போட்டியில் ஜப்பான் அணியுடனும் மோதவுள்ளது.
அதைத் தொடர்ந்து, ஜூன் 1ம் தேதி தென் கொரியாவுடனும், கடைசி போட்டியாக, ஜூன் 3ம் தேதி சீன தைபே அணியுடனும் இந்தியா விளையாடும். ஏ பிரிவிலும், பி பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். அரை இறுதிப் போட்டிகள், ஜூன் 5ம் தேதியும், இறுதிப் போட்டி, ஜூன் 6ம் தேதியும் நடைபெற உள்ளன.
