எக்ஸ் தளத்தை முடக்கியும் புதிய கணக்கு வெளியானது
புதுடெல்லி: தலைமை நீதிபதி விமர்சனத்தை தொடர்ந்து இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடங்கப்பட்டது. 6 நாளில் 1.55 கோடி இளைஞர்கள் இணைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் தனக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்குவதற்கு தாமதம் செய்வதாக சஞ்சய் துபே என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது பேசிய தலைமை நீதிபதி சூர்யாகாந்த், ‘’வேலையில்லாத சில இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகளைப் போல மாறி அடிப்படை கட்டமைப்பை தாக்கத் தொடங்குகிறார்கள். தொழிலில் இடமோ, வேலையோ கிடைக்காத சில இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளைப் போல மாறுகிறார்கள்.
அவர்கள் மீடியா, சமூக ஊடகவியலாளர்கள், அல்லது தகவல் அறியும் ஆர்வலர்களாக மாறி எல்லோரையும் தாக்குகின்றனர்’’ என்றார். வேலையில்லாத இளைஞர்களையும், ஆர்வலர்களையும் ‘கரப்பான் பூச்சிகள்’ மற்றும் ஒட்டுண்ணிகள் எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதியின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.ஆனால் தலைமை நீதிபதி பின்னர் விளக்கம் அளிக்கையில், ‘என்னுடைய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.போலியான பட்டங்களுடன் வரும் வழக்கறிஞர்களை குறித்துதான் அவ்வாறு தெரிவித்தேன்’ என்று அவர் தெரிவித்தார். ஆனால் அந்த கருத்துகள் இணையத்தில் பரவலாக பரவியது.
இந்த கேலிகளை தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற நகைச்சுவையான அரசியல் கட்சி இணையதளத்தில் தொடங்கப்பட்டது. அரசியல் வியூக நிபுணரும், பாஸ்டன் பல்கலைக்கழக மாணவருமான அபிஜீத் திப்கே என்பவரால் இது உருவாக்கப்பட்டது. கரப்பான் பூச்சியை உத்வேகமாகக் கொண்ட ஒரு நையாண்டிக் குழு, ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் 1.55 ேகாடி இணையப் பின்தொடர்பவர்களையும் பிரதான ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் மகுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் ஆகியோரின் ஆதரவை இந்த கட்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் தள கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்தார். இது குறித்து அபிஜித் கூறுகையில், ‘கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தனது தனிப்பட்ட கணக்கையும் ஹேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 55 லட்சம் பின் தொடர்பாளர்களை கடந்து பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் பின்தொடர்பாளர்களை இது விஞ்சியுள்ளது. இந்த மைல்கல்லை எட்டிய நேரத்தில் இந்தியாவின் அதன் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரப்பான்பூச்சி திரும்ப வந்துள்ளது என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் புது கணக்கு தொடங்கப்பட்டுள்ளது’ என்றார்.
ஏன் முடக்கம்?
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு நேற்று மாலை நிலவரப்படி இன்ஸ்டாகிராம் பக்கம் சுமார் 1.56 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன் செயலில் உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘காக்ரோச் இஸ் பேக்’ எனும் பெயரில் வெளியான ஒரு பதிவு, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான தளத்தில் சுமார் 88 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ பாரதிய ஜனதா கட்சியின் கணக்குடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டது.
மேலும் அவர்கள் எங்களை முடக்கியதற்கான காரணம் இதுதான் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், பாஜவின் தேர்தல் சின்னமான தாமரை மலரை ஒரு கரப்பான் பூச்சி கடித்துத் தின்னும் படமும் இடம்பெற்றிருந்தது. ‘ எங்களை ஒழித்துவிடலாம் என்று நினைத்தீர்களா? ஹாஹா’ என்று மற்றொரு பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடங்கிய அபிஜித் தீப்கே கூறுகையில்,’எக்ஸ் கணக்கும் எங்கள் இயக்கமும் வளர்ந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களைப் பெறுகின்றன. ஒருவேளை அதுதான் அரசாங்கத்தைப் பயமுறுத்தியிருக்கலாம்’ என்றார்.
‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ பெயருக்காக 3 வர்த்தக முத்திரை விண்ணப்பங்கள் தாக்கல்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயருக்கான உரிமைகளைக் கோரி, மூன்று தனித்தனி வர்த்தக முத்திரை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதிகம் அறியப்படாத தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விண்ணப்பங்கள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற நையாண்டி அரசியல் அமைப்பைச் சுற்றி அதிகரித்து வரும் கவனத்திற்கு மத்தியில் வந்துள்ளன.
இந்த இணைய கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக முத்திரை பதிவேட்டு இணையதளத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விண்ணப்பங்கள், அரசியல் மற்றும் சமூக சேவைகளை வழங்கும் பிரிவின் கீழ் வர்த்தக முத்திரை பதிவை கோருகின்றன. அசிம் ஆதம்பாய் ஜாம் மற்றும் அகண்ட் ஸ்வரூப் ஆகிய தனிநபர்கள் மற்றும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற தனி உரிமையாளர் நிறுவனம் ஆகியவற்றால் தனித்தனி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எப்படி ஆரம்பித்தது கட்சி?
* இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் விமர்சனத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (cockroach janata party).
* தொடங்கப்பட்ட 6 நாட்களிலேயே 1.55 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களை தன் பக்கம் இழுத்தது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) என சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று இயங்கிவந்தது.
* இந்நிலையில், இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
* இதனைத் தொடர்ந்து ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (நிறுவன தலைவர் அபிஜித் தீப்கே கரப்பான்பூச்சிகள் சாவதில்லை எனும் புதிய வாசகத்துடன் கரப்பான்பூச்சி மீண்டும் வந்துவிட்டது என்ற எக்ஸ் கணக்கைத் தொடங்கியுள்ளார்.
* இந்த புதிய கணக்கு தொடங்கப்பட்ட சில மணிநேரங்களில் 39,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை அது மீண்டும் ஒருமுறை பகிர்ந்து கொண்டது.
