புதுடெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பீடு மற்றும் மறு மதிப்பீடு செயல்முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு ஜான் பிரிட்டாஸ் எம்பி கடிதம் எழுதியுள்ளார். மார்க்சிஸ்ட் எம்.பி.யான ஜான் பிரிட்டாஸ், 2026ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து கவலை தெரிவித்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பரவலான பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 2025ல் 88.39 சதவீதத்திலிருந்து 2026ல் 85.20 சதவீதமாகக் குறைந்துள்ளது.
திரையில் மதிப்பெண் வழங்கும் முறையின் அறிமுகம், இயற்பியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் உள்ள கடினமான வினாத்தாள்கள் மற்றும் கடுமையான மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றுடன் இந்த வீழ்ச்சியைத் தொடர்புபடுத்தியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.எனவே மதிப்பீடு மற்றும் மறு மதிப்பீடு செயல்முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
