ராஜீவ்காந்தி நினைவு தினம்; ‘அப்பா… உங்கள் கனவை என் தோளில் சுமப்பேன்’- ராகுல்காந்தி உருக்கமான பதிவு

 

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்தையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21-ம்தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது 35-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள அவரது நினைவிடமான வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளார். மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நவீன இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைப்பதில் ராஜீவ் காந்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அளித்துள்ளார். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கணினி மயமாக்கல் ஆகியற்றின் வாயிலாக இந்தியாவை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி வழிநடத்தினார். அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகள் வாயிலாக நாட்டில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்’ என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன். உங்கள் போதனைகள், உங்கள் விழுமியங்கள், உங்கள் நினைவுகள் எப்போதும் என்னுடன் நிலைத்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: