பெங்களூரு: காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்காக புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை விரைவில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி நீரைத் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என்று தெளிவான ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து வரும் நாட்களில் நான் விவாதிப்பேன்.
காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு எவ்வித உரிமையும் இல்லை. இது குறித்து ஒன்றிய நீர்வள ஆணையமே முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றமே அணை கட்ட பச்சைக்கொடியை காட்டியுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான அலுவலகத்தையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். விரிவான திட்ட அறிக்கை விரைவில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி கிடைத்த பிறகு, இத்திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெறும். மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் அரசு உறுதியாகவுள்ளது’ என்றார்.
