புதுடெல்லி: புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்ஸா புர்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த சில நாட்களில் பாகிஸ்தான் மீது இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்ஸா புர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் பகுதியில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது. உடலில் பல குண்டு காயங்களுடன் புர்ஹான் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்திய மர்ம நபர் தப்பி உள்ளார். புல்வாமா மாவட்டத்தில் ரத்னிபோரா பகுதியில் உள்ள கர்பத்போராவைச் சேர்ந்தவர் ஹம்ஸா புர்ஹான் (23). இவரது நிஜ பெயர் அர்ஜுமந்த் குல்சார் தார்.
டாக்டர் என்றும் பிரபலமாக அழைக்கப்பட்டவர். மேல்படிப்புக்காக கடந்த 2017ல் பாகிஸ்தானுக்கு சென்ற புர்ஹான், அங்கு தடை செய்யப்பட்ட அல்-பத்ர் தீவிரவாத அமைப்பில் சேர்ந்தார். அந்த அமைப்பில் விரைவில் தளபதி பதவிக்கு உயர்ந்த புர்ஹான், காஷ்மீருக்கு திரும்பி இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி மூளைச்சலவை செய்யும் முயற்சியில் தீவிராக ஈடுபட்டார். காஷ்மீரில் பல்வேறு நாச வேலைகளை செய்து வந்த புர்ஹான், புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு ஆயுத சப்ளை செய்துள்ளான்.
இதுதொடர்பாக தேடப்பட்ட நிலையில் அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பிச் சென்றார். இதனால் இவரை பயங்கரவாதியாக ஒன்றிய அரசு கடந்த 2022ல் அறிவித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலேயே பதுங்கியிருந்த புர்ஹான் தற்போது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்த மர்ம மரணங்கள்
கடந்த 2023ம் ஆண்டிலிருந்து லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த முக்கிய தளபதிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட சில நாட்களில் கடந்த மாதம் லாகூரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவன உறுப்பினர் அமிர் ஹம்சா பைக்கில் வந்த மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த மார்ச்சில் ஜேஇஎம் தலைவர் மசூல் அசாரின் மூத்த சகோதரர் முகமது தஹிர் அன்வர் சந்தேகத்திற்கிடமான வகையில் பாகிஸ்தானில் இறந்தார். ஓராண்டுக்கு முன், பாகிஸ்தானின் ஜீலம் சிந்த் பகுதியில் லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தீவிரவாதி அபு கதல் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
