இந்தூர்: மத்தியபிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குழந்தை திருமண தடுப்பு படையின் பொறுப்பாளர் மகேந்திர பதக் கூறுகையில், “இந்தூரில் வசிக்கும் 13 வயது சிறுமியின் தாய் கணவர் இறந்து விட்டதால் 2வது திருமணம் செய்து கொண்டார். இதனால் சிறுமி தனது தாத்தா, பாட்டி வீட்டில் உடன்பிறப்புகளுடன் வசித்து வந்தார்.சிறுமியின் தாத்தா, தனது ஒரு பேரனின் திருமணத்துக்கு ஈடாக 42 வயது ஆணுடன் சிறுமியை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்துள்ளார். இந்த திருமணம் கடந்த ஏப்ரல் 25ம் தேதி நடக்க இருந்தது. அதிகாரிகள் எச்சரித்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.
ஆனால், அந்த உத்தரவை மீறி அடுத்த நாளே(ஏப்.26) இரவு சிறுமியை இந்தூரில் இருந்து உஜ்ஜயினிக்கு அழைத்து சென்று, அங்கு 42 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து தாத்தா, பாட்டி வீட்டுக்கு வந்த சிறுமியை மீண்டும் மாமியார் வீட்டுக்கு செல்லும்படி சொல்லி, சிறுமியை தாக்கி உள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மணமகன், சிறுமியின் தாத்தா, பாட்டி, உள்பட 13 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
