கண்ணூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் பினராயி விஜயன்: போட்டோ சமூக வலைதளங்களில் வைரல்

 

திருவனந்தபுரம்: கண்ணூர் ரயில் நிலையத்தில் ஆள் அரவமின்றி ரயிலுக்காக காத்திருக்கும் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள அரசியல் வரலாற்றில் வேறு எந்த முதல்வரும் செய்யாத ஒரு சாதனையை பினராயி விஜயன் படைத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. கேரளத்தில் தொடர்ந்து 10 வருடங்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. இவர் முதல்வராக இருந்த போது கேரளத்தில் இதற்கு முன் வேறு எந்த முதல்வருக்கும் இல்லாத வகையில் மிக அதிக பாதுகாப்பு அளிக்கப்பட்டது. முன்னும், பின்னும் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் புடைசூழத் தான் எங்கும் செல்வார்.

பினராயி விஜயன் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படும். நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொள்ள வந்தால் கடும் பாதுகாப்பு கெடுபிடிகள் ஏற்படுத்தப்படும். இப்படி கடந்த 10 வருடங்கள் கடுமையான போலீஸ் பாதுகாப்பு வளையத்திலும், தொண்டர்கள் புடைசூழவும் இருந்து வந்த பினராயி விஜயன் நேற்று முன்தினம் கண்ணூர் ரயில் நிலையத்தில் ஆள் அரவமின்றி ரயிலுக்காக காத்திருக்கும் ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலைய நடைமேடையில் உள்ள ஒரு சாதாரண நாற்காலியில் கண்ணூர் மாவட்ட சிபிஎம் செயலாளர் மற்றும் ஒரு பயணியுடன் இவர் அமர்ந்திருந்தார்.

அவருக்கு சற்று தொலைவில் சில போலீசார் மட்டுமே பாதுகாப்புக்காக இருந்தனர். அருகில் வேறு தொண்டர்கள் யாரும் இல்லை. இந்த போட்டோவை பார்த்து, ‘எப்படி இருந்த ஆள், இப்படி ஆகிவிட்டாரே’ என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: