அடிக்கடி பழுதாகும் மின்வாரிய சர்வர் ஆன்லைனில் பணம் கட்ட முடியாமல் தவிப்பு

மானாமதுரை, மார்ச் 2:மின்வாரிய சர்வர் அடிக்கடி பழுதாகி விடுவதால் அபராத தொகையுடன் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மானாமதுரை நகர், ஊரகம் என 2 பிரிவுகளிலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் உள்ளன. 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்துவோர், சுந்தரபுர அக்ராஹாரத்தில் உள்ள ஊரகப்பிரிவில் தங்கள் கட்டணங்களை செலுத்துகின்றனர். நகர்ப்புற அலுவலகம் சிப்காட் அலுவலகத்தில் சென்று நேரில் செலுத்த முடியாத அளவிற்கு சிரமமாக இருப்பதால் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ள கூகுள்பே, போன்பே போன்ற ஆப்கள் மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக மின்வாரிய வலைதளத்தில் மின்கட்டணம் செலுத்தும்போது சர்வர் இயங்காமல் அடிக்கடி நின்று விடுகிறது. இதன்காரணமாக மின்கட்டணம் செலுத்த தனியார் மையங்களுக்கு செல்கின்றனர். அங்கு மின்கட்டணத்துடன் கூடுதல் கட்டணமும் பெறப்படுகிறது.

இதுகுறித்து பாஸ்கரன் கூறுகையில், ‘படித்தவர்கள் பெரும்பாலும் தற்போது தங்களது செல்போனில் இருந்தே வீடு, கடைகள், அலுவலகங்களுக்கான மின்கட்டணத்தை செலுத்துகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மின்வாரிய இணையத்தளத்திற்கு செலுத்தும் மின்கட்டணம் அங்கு செல்லாமல் திரும்பி வந்து விடுகிறது. மின்வாரிய அலுவலக சர்வர் அடிக்கடி பழுதாவதால் கடைசி நாளன்று மின்கட்டண செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் சர்வரை பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: