ஆனைமங்கலம் செப்பேடுகளை நாகப்பட்டினத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்: ஜவாஹிருல்லா அறிக்கை

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எவ்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினத்தில் “சூடாமணி வர்ம விகாரை” என்ற பவுத்த மடாலயம் அமைந்திருந்தது. இது கடாரத்து மன்னரான ஸ்ரீமாற விஜயோத்துங்க வர்மனால் அவரது தந்தையின் நினைவாக கட்டப்பட்டது. நாகப்பட்டினத்தில் உள்ள இந்த பவுத்த மடாலயத்தின் பராமரிப்பிற்காக, முதலாம் ராஜராஜ சோழன் “ஆனைமங்கலம்” என்ற கிராமத்தை வரியில்லா நிலமாக வழங்கினார்.

18ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் ஆட்சி காலத்தில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகள் நாகப்பட்டினத்தில் இருந்து தான் நெதர்லாந்து நாட்டிற்கு அபகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. சோழர்களின் ஆனைமங்கலம் செப்பேடுகளை 300 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நெதர்லாந்து பிரதமர் ஒப்படைக்கவிருக்கிறார் என்பதை அறிந்து பெரும் மகிழ்வடைந்தேன்.

இந்த செப்பேடுகள் சாதாரண தகடுகள் அல்ல-ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்து மகத்துவம், கடல் கடந்து விரிந்த அரசியல்-நட்பு, மற்றும் தமிழர் பண்பாட்டின் சாட்சிகளாக உள்ளன. கடந்த திமுக ஆட்சியில் இச்செப்பேடுகளை தமிழ் நாட்டிற்கு மீண்டும் திரும்ப கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்ததுடன்

ஒன்றிய அரசிடமும் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்தது. அனைவரின் தொடர் முயற்சிகளும் இணைந்து இன்று இத்தகையைப் பலனை அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே வேளையில், இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் நாகப்பட்டினமே ஆகும். அதனை உணர்ந்து ஒன்றிய அரசு இச்செப்பேடுகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசும் உரிய வகையில் இதற்கான முயற்சிகளைத் தாமதமின்றி மேற்கொண்டு, இவ்வரிய வரலாற்று ஆவணங்கள் அதன் தாய்மண்ணான நாகப்பட்டினத்திற்கு கொண்டு வருவதை உறுதி செய்யவேண்டும். இச்செப்பேடுகளை மக்கள் காணும் வகையில் நாகப்பட்டினத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு இதனை அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.

Related Stories: