ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக கூறவில்லை: செங்கோட்டையன் அதிரடி

 

கோவை: ஆதரவளித்த அதிமுகவிற்கு அமைச்சர் பதவி என்று நாங்கள் எதுவும் கூறவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக அமைச்சர் செங்கோட்டையன் நேற்று காலை கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: ஜெயலலிதா இருக்கும் பொழுது முதற்கட்டமாக 7 பேரை தான் அமைச்சராக்கினார்.

அதுபோல் விஜய்யும் படிப்படியாக உயர்த்துவார். முதல்வர் நிலையில் நின்று எப்படி இயக்குவது என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும். எங்களை பொறுத்தவரையில் இப்போது, ‘‘நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான்’’ அதுதான் இப்போது இருக்கும் நிலை.

நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை தவெக தலைவர் விஜய்க்கு உள்ளது. பொருளாதாரம் என்பது படிப்படியாக ஆய்வு செய்துதான், தெளிவான விளக்கத்தை சொல்ல முடியும். உடனடியாக கேள்விகளுக்கு பதில் கூற முடியாது. தான் ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என்று எடப்பாடி நினைக்கிறார். அதனால் தான் அதிமுக இந்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு திட்டமாக விஜய் செய்வார். எடுத்த உடனே 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ஆலயங்களின் அருகே டாஸ்மாக் இருக்கக் கூடாது என்று எழுந்த கோரிக்கையின் பேரில் 717 இடங்களில் கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார். இதெல்லாம் பெரிய சாதனை. இவ்வாறு கூறினார். தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக எம்எல்ஏக்கள் எத்தனை பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற கேள்விக்கு, ‘‘நீங்கள் தான் சொல்ல வேண்டும். நாங்கள் இதுவரை அப்படி எதுவும் சொல்லவில்லையே’’ என்றார்.

Related Stories: