ஊட்டி: மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டிகள், கலை விழாக்கள் என மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி இன்று (18ம் தேதி) துவங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ வசதியாக ேமரிகோல்டு, சைக்ளோமென், பால்சம், பெட்டுனியா, பேன்சி, டெல்பினியம் உள்ளிட்ட 275 வகைகளில் 10 லட்சம் வண்ண வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூத்து குலுங்குகின்றன. இதுதவிர அலங்கார மாடங்கள் மற்றும் பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள புல்வெளிகளில் அலங்கரிப்பதற்காக 50 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் அலங்காிக்கப்பட்டுள்ளன.
மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற தலைப்பில் மகாபலிபுரம் கடற்கரை கோயில், செஞ்சிகோட்டை, திருவள்ளுவர் சிலை, சென்னை சென்ட்ரல் கட்டிடம், செல்பி ஸ்பாட் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அலங்காரங்கள் மொத்தம் 7 லட்சம் கார்னேசன் மலர்கள், ரோஜாக்கள், கிராசந்திமம் உள்ளிட்ட மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு வண்ண வண்ண விளக்குகளால் பூங்கா அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சுற்றுலா பயணிகள் கண்டு வியக்கும் வகையில் மலர்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. கண்காட்சியை முன்னிட்டு இன்று (18ம் தேதி) நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாலான சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம் மூலம் கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஊட்டியில் இருந்து கோவைக்கு 40க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும், சுற்றுலா பயணிகள் சர்க்கீயூட் பஸ்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
