திருச்செந்தூர்: முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. கோயிலின் முகப்பில் உள்ள சண்முக விலாசம் மண்டபம் அருகே துலாபாரம் பகுதியிலிருந்து பாதயாத்திரை, காவடி எடுக்கும் பக்தர்களுக்கான தனி வழி உள்ளது.
இந்த வழி தைப்பொங்கல், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி மற்றும் மாசி திருவிழா நாட்களில் பக்தர்களுக்காக திறக்கப்படும். மற்ற நாட்களில் முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள் உள்ளிட்டோர் வந்தால் அவ்வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டு ரூ.100 கட்டணப் பாதையில் அவர்களை தரிசனத்திற்கு அனுப்புவர். இந்நிலையில் நேற்று காலை பரமக்குடியைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வந்தனர். அவர்கள் 1 மணி நேரமாக சண்முக விலாச மண்டபம் முன்பு காத்து நின்றனர்.
ஆனால் பாதை திறக்கப்படவில்லை. அப்போது சில உபயதார பக்தர்களுக்காக சண்முக விலாசம் முகப்பு கதவு லேசாக திறக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதைக்கண்ட பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் கோயில் முன்பு கூடியிருந்த பக்தர்கள் கூட்டம் அந்த வழியாக கோயிலினுள் செல்ல முயன்றனர். இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் சண்முக விலாச கதவை முழுமையாக தள்ளி திறந்து விட்டு கோயிலினுள் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
