புதுவை அருகே கோர விபத்து ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் மரணம்: காரில் வந்த 5 பேர் படுகாயம்

 

காலாப்பட்டு: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மண்டவாய் புதுக்குப்பம் அடுத்த ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேஷாத்ரி மகன் சிலம்பரசன்(29). திருமணம் ஆகாதவர். இவருக்கு கையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக மாவு கட்டு போடுவதற்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பகுதிக்கு சிலம்பரசனின் அக்கா கணவர் ஸ்டாலின்(37), மற்றொரு அக்கா கணவரான டீ கடைக்காரர் கார்த்திகேயன்(33) ஆகியோர் புதுவைக்கு ஒரே பைக்கில் சென்றனர்.

பெரியமுதலியார்சாவடியில் உள்ள கலால் சோதனை சாவடி அருகே, பின்னால் வந்த தமிழ்நாடு அரசு விரைவு சொகுசு பேருந்து, முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதில் கார் காலி மனையில் புகுந்தது. கார் மீது மோதிய வேகத்தில் ஸ்கூட்டர் மீதும் மோதியது. இதில் ஸ்கூட்டரில் வந்த 3 பேரும் பேருந்தின் அடியில் சிக்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

பேருந்தை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகேஸ்வரன்(30) சாலையில் நிறுத்திவிட்டு தப்பி சென்று, புதுவை உருளையன்பேட்டை போலீசில் சரணடைந்தார். விபத்தில் காரில் பயணம் செய்த ஐதராபாத்தை சேர்ந்த ஐடி ஊழியர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: