குதிரைகளிடம் பரவும் கிளாண்டர்ஸ் வைரசால் மக்களுக்கு பாதிப்பா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

 

நாமக்கல்: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:திமுக ஆட்சியில் சுகாதாரத் துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள, மக்களுக்கு பயன் அளிக்கும் அனைத்து நலத்திட்டங்களும் தொடரும். அந்த திட்டங்களில் ஏதாவது மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் அது பற்றியும் முடிவு செய்யப்படும்.

அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சராவது குறித்து, தவெக தலைவர் தான் முடிவு செய்வார். நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தவெகவின் கொள்கை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தான் பாஜ, ஆர்எஸ்எஸ்சின் திட்டமாக உள்ளது. அதே போல, ஒரே நாடு ஒரே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பல லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வினை எழுதும் போது, ஏதாவது ஒரு இடத்தில் கேள்வித்தாள் வெளியாகி விடுகிறது. அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். ஆன்லைனில் தேர்வு நடத்தும் போது, அதன் மீதான நம்பகத்தன்மை குறைவாக தான் இருக்கும்.

தமிழகத்தில் நீட் தேர்வு கிராமப்புற மாணவ, மாணவியருக்கு பெரும் சுமையாக உள்ளது. எனவே, நீட் தேர்வு வேண்டாம் என்பது தான், எங்களின் உறுதியான கொள்கை. இது தொடர்பாக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்படும். சென்னையில், குதிரையிடம் காணப்பட்ட புதிய வகையான கிளாண்டர்ஸ் வைரஸால், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக தமிழகம் முழுவதும் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

Related Stories: