வங்கக்கடல் பகுதியில் 3 காற்றழுத்தங்கள் நீடிப்பு 15 மாவட்டங்களில் கனமழை

சென்னை:குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா முதல் உள் கர்நாடகா வரையிலும், வட கிழக்கு தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தில் 3 காற்றழுத்தங்கள் நிலை கொண்டுள்ளதால், 15 மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் இடிமின்னலுடன், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 70 மிமீ வரை பெய்துள்ளது.

இதற்கிடையே, அதிகபட்ச வெப்பநிலை அனேக இடங்களில் இயல்பைவிட 3-6 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தும், பிற இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் ஏதும் இன்று இருந்தது. அதன் தொடர்ச்சியாக வேலூரில் 100 டிகிரி அளவில் வெயில் நிலவியது. இந்நிலையில், வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் இரவில் வலுவிழந்தது.

மேலும், வளி மண்டலத்தில் சுமார் 3.1 கிமீ உயரத்தில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன், 0.9 கிமீ உயரத்தில் மேற்கு விதர்பா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல சுழற்சியில் இருந்து மன்னார் வளைகுடா வரையில், மரத்வாடா, உள் கர்நாடகா, மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளது.

மேலும், 1.5 கிமீ உயரத்தில் வட கிழக்கு தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 50 கிமீ வேகத்துடன் கூடிய கனமழை நேற்று பெய்தது.

இந்நிலையில், 26ம் தேதியில் இருந்து கேரள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும். மேற்கண்ட பல்வேறு வானிலை சூழல்களின் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும். இதேநிலை, 21ம் தேதி வரை நீடித்து, பின்னர் வட கடலோரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும்.

இந்த சூழ்நிலை காரணமாக 21ம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். இருப்பினும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறையவும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

இது தவிர 21ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கிமீ வேகம் முதல் 60கிமீ வேகம் வரையில் வீசும். வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக் கடலின் அனேக பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 50 கிமீ வேகம் முதல் 60 கிமீ வேகம் வரையில் வீசும்.

Related Stories: