நடைபயிற்சி செல்வதாக டிரைவரிடம் கூறிவிட்டு அடையார் ஆற்றில் குதித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை திருவிக பாலம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, கார் டிரைவரிடம் நடைப்பயிற்சி செல்வதாக கூறிவிட்டு அடையார் ஆற்றில் குறித்து பிரபல சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் கே.ராஜன்(85). தயாரிப்பாளரான இவர், கடந்த 1983ம் ஆண்டு ‘பிரம்மச்சாரிகள்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். முன்னணி சினிமா தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார்.

கடந்த 2000ம் ஆண்டு சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் நின்று தலைவராக வெற்றி பெற்றவர். நடிகர்கள் பிரச்னை என்றாலும், தயாரிப்பாளர்களுக்குள் பிரச்னை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவர். தற்போது சினிமா தயாரிக்கவில்லை என்றாலும், சிறு சிறு படங்களுக்கு பண உதவி செய்து வந்தார். கே.ராஜன் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை தனது கார் டிரைவரான தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்த தனசேகரன் என்பவருடன் காரில் அடையார் நோக்கி வந்தார். கார் திருவிக பாலம் அருகே வந்தவுடன் தனது டிரைவர் தனசேகரனிடம், ‘காரை இங்கேயே நிறுத்திக்கொள்ளுங்கள் நான் அடையார் ஆற்றுப்பாலத்தில் நடைபயிற்சி சென்றுவிட்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கார் டிரைவரும் விரைவில் வந்துவிடுவார் என்று காரின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார். இதை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கூச்சலிட்டு அலறினர். சிலர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 100 மூலம் தகவல் கொடுத்தனர். இதை கவனித்த கார் டிரைவர் யார் என்று பார்த்த போது, வாகன ஓட்டிகள் வயதான நபர் ஒருவர் குதித்துவிட்டதாக கூறினர். பிறகு, ஆற்றில் குதித்தது ராஜன் என்பதை அறிந்து கதறி அழுதார்.

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் படி, அடையார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் விரைந்து வந்து பார்த்தனர். கே.ராஜன் குதித்த பகுதியில் அதிகளவில் சேறும் சகதியும் இருப்பதால் அவர் குதித்த உடனே சேற்றில் சிக்கியது தெரியவந்தது. பின்னர் போலீசார் சைதாப்பேட்டை தீயணைப்பு வீரர்களை வரவழைத்து ரப்பர் படகு மூலம் அடையாறு ஆற்றில் இறங்கி பாதாள சுரடு உதவியுடன் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் உடலை மீட்டனர்.

அதிகநேரம் சேற்றில் சிக்கி இருந்ததால் அவர் மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது. அடையார் போலீசார் கே.ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர். அவரது குடும்பத்தினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். கே.ராஜன் எதற்காக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என உடன் வந்த அவரது கார் டிரைவர் தனசேகரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னையா அல்லது தொழில் ரீதியான பிரச்னையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* மு.க.ஸ்டாலின் இரங்கல்
திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். திரைத்துறையின் முன்னேற்றத்திற்காகவும் சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் எப்போதும் துணிச்சலுடன் குரல் கொடுத்து வந்தவர் ராஜன். திரைப்பணியோடு கல்வி பணியும் ஆற்றியவர். தமிழ்த்திரைப்படங்களுக்கு தமிழிலேயே தலைப்பு வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.

தனிப்பட்ட முறையில் என்மீது மிகவும் அன்பு செலுத்திய ராஜன், தனது பேச்சில் எப்போதும் திரைத்துறையின் அடித்தளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தியே பேசுவார். அன்னாரை இழந்து வாடும் கலைத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்த துயரத்தை தாங்கும் வலிமை கிடைக்கட்டும். அவர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது இரங்கல் செய்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* திரையுலக முறைகேடுகளை அதிரடியாக பேசியவர்
திரையுலக நிகழ்ச்சிகளில் தனது அதிரடி பேச்சுகளால் பிரபலமானவர் கே.ராஜன். ‘பிரம்மச்சாரிகள்’, ‘டபுள்ஸ்’, ‘அவள் பாவம்’, ‘நினைக்காத நாளில்லை’ ஆகிய படங்களை தயாரித்த கே.ராஜன், பிறகு ‘நம்ம ஊரு மாரியம்மா’, அப்பாஸ், குணால் நடித்த ‘உணர்ச்சிகள்’ என்ற படத்தை இயக்கினார். தவிர ‘தங்கமான தங்கச்சி’, ‘சின்ன பூவை கிள்ளாதே’ ஆகிய படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றினார். ‘உளவுத்துறை’, ‘பாம்புசட்டை’, ‘துணிவு’, ‘பகாசூரன்’ உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக பொறுப்பு வகித்து, சினிமா வர்த்தகத்தில் முக்கிய  பங்காற்றினார். சினிமா ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமா சந்திக்கும் சவால்கள், தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்கள், நடிகர்களின் அதிகப்படியான சம்பளம் மற்றும் திரையுலகில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அதிரடியாகவும், நேர்மையாகவும் பேசி வந்தார்.

திருட்டு விசிடிக்கு எதிராக சென்னை பர்மா பஜாரில் அறப்போராட்டம் நடத்தினார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவில் கே.ராஜன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது மனைவி நீலாவதி. 3 மகன், 1 மகள் இருக்கின்றனர். இதில் ஒரு மகன் கே.ஆர்.பிரபு, ‘நினைக்காத நாளில்லை’ என்ற படத்தை இயக்கினார். குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 3 வருடங்களாக கோடம்பாக்கத்திலுள்ள தனியார் ஓட்டலில் தனியாக தங்கியிருந்தார் கே.ராஜன். அவரது மகன்கள் அடிக்கடி வந்து அவரை பார்த்துவிட்டு சென்றனர்.

Related Stories: