ரஜினியுடன் போட்டிதான் பொறாமையே இல்லை: கமல் ‘நச்’

 

அவனியாபுரம்: சென்னையிலிருந்து மதுரைக்கு நேற்று வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வரும் நிலையில், அவர் குறித்து இரு நாட்களில் கருத்து சொல்வதென்றால் அது ஜோசியமாகத்தான் இருக்க முடியும். புதியவர்கள் நிறைய பேர் வந்துள்ளனர். ஆறு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும். அதேநேரம் புதியவர்கள் என்ற பேச்சும் சரி கிடையாது. சுதந்திரம் வாங்கியபோது அனைவரும் புதியவர்கள் தான். நீங்கள்தான் ஓட்டு போட்டீர்கள். நீங்கள்தான் கவனித்து சொல்ல வேண்டும். நாங்களும் கண்காணிக்கிறோம்.

திராவிட கட்சி இல்லாத ஒரு புதிய ஆட்சி வந்திருக்கிறதே என கேட்கிறீர்கள். தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் கட்சி ஆரம்பித்து ஆட்சி நடத்தினால் அது திராவிட ஆட்சி தான். தமிழ்நாட்டில் இருந்து தமிழ் பேசுகிறவர் ஒருவர் கட்சி ஆரம்பித்தாலே அந்த கட்சிக்கு பேர் திராவிட கட்சி தான். சிபிஎஸ்சியில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இதை கட்டாயப்படுத்த கம்பல் பண்ண முடியுமா? தமிழகத்தில் அது நடந்து விடுமா?. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம், ‘‘முதல்வரானதும் விஜய் பொறுப்பேற்றதும், அனைத்து கட்சித் தலைவர்களையும் சென்று பார்த்துள்ளார். ஆனால் எடப்பாடியை பார்க்கவில்லை. 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு தருவதை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்றதற்கு, ‘‘உங்களை மாதிரி தான் பார்க்கிறேன். வேடிக்கை பார்க்கிறேன்’’ என்றார். தொடர்ந்து நிருபர்கள், ‘‘தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றது எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்.. நடிகர் கமல் வந்தால் கூட பொறாமைப்பட்டிருப்பேன் என சிரிப்போடு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளாரே?’’ எனக் கேட்டதற்கு, ‘‘அவர் சிரிப்போடு தான் சொன்னாரே தவிர வேறொன்றுமில்லை.

நாங்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, பொறாமைப்பட்டதில்லை. நாங்கள் இருவரும் போட்டி போடுவோம், ஆனால் பொறாமைப்பட்டது கிடையாது. நாங்கள் பெஸ்ட் ஸ்போர்ட்ஸ்மென் இன் தமிழ்நாடு. நாங்கள் சினிமா துறையில் உள்ளோம். விளையாட்டுத்துறையில் இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்போம்’’ என்று கமல் பதில் அளித்தார்.

Related Stories: