திமுக அரசின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட ரூ.15,803 கோடி விமான தயாரிப்பு திட்டத்தை ஆந்திராவிடம் பறிகொடுத்த விஜய் அரசு: தொழில் முதலீடுகள் படிப்படியாக இடம்மாறும் அபாயம்

சென்னை: திமுக அரசால் பெரும் சவாலுக்கு பிறகு கொண்டுவரப்பட்ட ரூ.15,803 ஆயிரம் கோடி முதலீட்டில் செயல்படுத்தப்பட இருந்து மேம்படுத்தப்பட்ட நடுத்தர போர் விமான தயாரிப்பு திட்டம் ஆந்திராவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கழகத்தின் சார்பில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் நடுத்தர ராணுவ விமானம் தயாரிப்பு நிறுவனத்தை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, இந்த தொழிற்சாலையை தமிழகத்தில் கொண்டுவர முந்தைய திமுக அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில் ஓசூரில் புதிதாக அமைக்கப்படவுள்ள விமான நிலையம் அருகே இந்த நிறுவனத்தை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக அந்த பகுதியில் 100 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக ஒதுக்கியது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு அமைத்து தருவதாக இருந்தது.

ஆரம்பக்கட்ட பணிகள் நடந்துவந்த நிலையில் இந்த திட்டத்தை ஆந்திர மாநிலம் புட்டப்பர்த்தியில் அமைக்க ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் முடிவு செய்து நேற்று முன்தினம் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்துள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

பெங்களூரு விமாநாபுராவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி பக்கத்திலேயே ஓசூர் இருக்கிறது. தமிழ்நாட்டில் தான் இந்த திட்டம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு அரசியல் காரணங்களுக்காக ஆந்திராவிற்கு வழங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ராணுவ மையத்தையும் கொண்டு வர கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு, டிஆர்டிஓவுடன் (மத்திய அரசுடன்) தீவிரமாகப் பேசி வந்தது. ஒரு பக்கம் பயணிகள் விமானம், மறுபக்கம் இந்த ராணுவ விமான சோதனை மையம் என ஓசூரை உலகத் தரத்தில் மாற்றும் திட்டமும் ஒன்றிய அரசிடம் இருந்தது.

தமிழ்நாடு, ஆந்திரா என இரண்டு மாநிலங்களுக்கும் இடையே இந்த திட்டத்தை பெறுவதில் பிராந்தியப் போட்டி இருந்தது. ஆனால் ஒன்றிய அரசு ஆந்திராவிற்கு ஆதரவு தந்துள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இணைந்து இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டனர். தொழில்நுட்ப ரீதியாகவும், உள்கட்டமைப்பு வசதிகளிலும் ஆந்திராவை விட தமிழ்நாடுதான் (ஓசூர்) மிகச் சிறந்த வசதிகளை செய்து தருவதாக தெரிவித்திருந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான ஓடுதளம் 3.5 கி.மீ நீளத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆந்திராவில் உள்ள ஓடுதளம் வெறும் 2.1 கி.மீ தான். ஆந்திரா இனிமேல்தான் நிலத்தை கையகப்படுத்தி ஓடுதளத்தை 3 கி.மீ ஆக அதிகரிக்க வேண்டும். இவ்வளவு சாதகங்கள் இருந்தும் மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டை விட்டு ஆந்திராவை தேர்ந்தெடுத்தது என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை இன்னும் சொல்லவில்லை.

தொழில் முதலீடுகளை மாநிலங்களில் முன்னணி மாநிலமாக திகழ்ந்த தமிழக அரசின் திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு கைவிட்டு போய்விடக்கூாது. திமுக ஆட்சி காலத்தில் பல ஆயிரம் கோடி அளவிலான வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த முதலீடுகளை பாதுகாக்க வேண்டும். அது தொடர்பாக உடனடியாக தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெரும் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயரும் அபாயம் ஏற்படும்.

ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதும், இந்த தொழிற்சாலைகளை சார்ந்த துணை தொழில்கள் உருவாதல் போன்ற வாய்ப்புகள் பறிபோய்விடக்கூடாது. இந்த விஷயத்தில் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏற்கனவே வந்துள்ள தொழில் முதலீட்டு திட்டங்களை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

* சவாலுக்கு இடையே சாத்தியமான சாதனைகள்
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா பரவல் ஊரடங்குகள் முழுமையாக விலக்கப்படவில்லை. ஆட்சிக்கு வந்த பிறகும் ஊரடங்கை செயல்படுத்த வேண்டிய சூழல் நிலவியது. இதில் இருந்து மக்களை மீட்டு பாதுகாக்கவும் பல்வேறு முயற்சிகளை திமுக அரசு மேற்கொண்டது. இத்தனைக்கும் இடையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகத் திகழச் செய்வதற்கான முயற்சிகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஈடுபட்டது. குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகள், தொழில் வாயப்புகளைப் பெருக்கியது.

இந்த வகையில் ஆட்சிக்கு வந்து 33 மாதங்களிலேயே ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்தோடும் முனைப்போடும் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக விளைந்தவை இவை. இதற்காகவே சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடியில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு ரூ.1,90,803 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 2,80,600 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

அடுத்த கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்கு சென்று ரூ.7,441 கோடி முதலீடுகள் பெறபட்டு, 17,371 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மூன்றாவதாக ஜனவரி 2024ல் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.

இதன் மூலம் 14,54,712 நேரடி, 12,35,945 மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகின. அடுத்ததாக ஸ்பெயின் பயணம் மூலம் ரூ.3,440 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டன. இதன் மூலம், 74,757 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது என அரசு வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

* திமுக அரசின் முதலீடுகள், வேலைவாய்ப்புகள்
2021 மே மாதம் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, ஒன்றிய அரசே வியக்கும் அளவுக்கு தொழில் முதலீடுகளை குவித்து வேலை வாய்ப்புகளை பெருக்கியது. மொத்தம் ரூ.12 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

* இரட்டை இயந்திர போர் விமானம்
மேம்படுத்தப்பட்ட நடுத்த போர் விமானம் இந்தியாவால் வடிவமைக்கப்படும் இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட ஐந்தாவது தலைமுறையை சார்ந்த போர் விமானம். ரகசிய தாக்குதல், பல்வகை தாக்குதல் நடத்தக்கூடிய போர் விமானம். ஏற்கனவே இந்திய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள ஜாகுவார், மிராஜ் 2000 போன்றவற்றிக்கு மாற்றாக இந்த விமானம் தயாரிக்கப்படவுள்ளது.

* அரசு போனது.. அரிய வாய்ப்பும் போனது
திமுக அரசு இருந்தபோது எண்ணற்ற முதலீடுகள் ஒன்றிய பாஜ அரசின் ஒத்துழைப்பு இல்லாமலேயே கொண்டு வரப்பட்டன. பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஒன்றிய அரசு முனைந்த திட்டங்கள் கூட திமுக அரசின் தீவிர முயற்சியால் தடுக்கப்பட்டன. மீண்டும் திமுக ஆட்சி அமைந்திருந்தால் விமான தயாரிப்பு திட்டமும் கைநழுவாமல் இருந்திருக்கும்.

ஆனால், திமுக அரசு இல்லை என்பது இந்த அரிய முதலீடு நழுவ முக்கிய காரணமாகி விட்டது என்று கருத்து தெரிவிக்கின்றனர் தொழில் துறை வல்லுநர்கள். மகாராஷ்டிராவில் தேர்தல் நேரத்தில் தான் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான வேதாந்தா-பாக்ஸ்கானின் செமிகண்டக்டர் ஆலை, டாடா-ஏர்பஸ் ராணுவ விமான தயாரிப்பு திட்டம் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* மொத்த முதலீடு ரூ.12.37 லட்சம் கோடி
* வேலை வாய்ப்பு 36.52 லட்சம் பேர்
* கையெழுத்தான ஒப்பந்தங்கள் 1,179
* திட்ட செயல்பாட்டுக்கு வந்தவை 867
* செயல்பாட்டு சதவீதம் 73%
* திமுக ஆட்சியில் ஆட்டோமொபைல் துறையில் முக்கிய தொழில் முதலீடுகள்
* டாடா மோட்டார்ஸ் (ரானிப்பேட்டை) ரூ.9,000 கோடி
* வின்பாஸ்ட் (தூத்துக்குடி) ரூ.16,000 கோடி
* ஹூண்டாய் மோட்டார்ஸ் (சென்னை) ரூ.20,000 கோடி
* ஓலா எலக்ட்ரிக் (கிருஷ்ணகிரி) ரூ.7,614 கோடி

இதுதவிர, தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் முமோனியா உற்பத்தி ஆலை, திருவண்ணாமலையில் பசுமை எரிசக்தி, நாகபட்டினத்தில் பெட்ரோல் கெமிக்கல்ஸ், ஐபோன் தயாரிப்பு ஆலைகள், செயற்கை நுண்ணறிவு மையம், கணினி மற்றும் மின்னணு சாதன உற்பத்தி, ரோபோட்டிக் ஆலை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அடங்கும்.

Related Stories: