ஊட்டி : ஊட்டி ரோஜா பூங்காவில் துவங்கி நடைபெற்று வரும் 21வது ரோஜா கண்காட்சியை இரண்டாவது நாளாக ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டு சட்டமன்ற தேர்தல் காரணமாக கோடை விழா நிகழ்ச்சிகள் தேதி முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் முடிவடைந்த நிலையில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி ஆகியவற்றை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து 21வது ரோஜா கண்காட்சி நேற்று ஊட்டி ரோஜா பூங்காவில் துவங்கியது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரண்டு லட்சம் மலர்களை கொண்டு பறவைகளின் சொர்க்கம் என்னும் கருப்பொருளில் பல்வேறு பறவைகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 70 ஆயிரம் மலர்களை கொண்டு அன்னப்பறவைகள் அலங்காரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து இருவாச்சி பறவை, கழுகு, வரித்தலை வாத்து, அரசவால் குருவி, இமயமலை கொண்டைக் குருவி, தேன் சிட்டு, தீக்காக்கை, நீர் மேல் வெட்டிப் பறவை மற்றும் தூக்குனாங்குருவி கூடு போன்ற பறவைகளின் அலங்காரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் குழந்தைகளைக் கவரும் வகையில் ஆங்கிரி பேர்ட், டிவிட்டி பேர்ட் பறவைகள் அலங்காரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பூங்காவின் பல்வேறு இடங்ளிலும் செல்பி ஸ்பாட்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் துவங்கிய இந்த ரோஜா கண்காட்சியினை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட நிலையில் இரண்டாவது நாளான நேற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு ரோஜா காட்சி 3 நாட்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்தாண்டு ஐந்து நாட்கள் நடத்தப்பட உள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வரக்கூடும் என எதிர்ப்பார்க்கிறோம். ரோஜா செடி வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காட்சியின் நிறைவு விழாவில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது” என்றனர்.
