*கலெக்டர் நேரில் ஆய்வு
ஈரோடு,மே16: ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை இயக்கப்படும் 1,096 பேருந்துகள், வேன் போன்ற வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.
இதனை ஈரோடு கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைந்து, வருகிற ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி தனியார் பள்ளிகளில் மாணவ,மாணவிகளை அழைத்து வருவதற்காக இயக்கப்படும் பேருந்துகள், வேன் போன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பது ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான பள்ளி வாகனங்களை ஆய்வு செய்திட அரசு உத்தரவிட்டது.
இதன்பேரில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை என மூன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களின் தணிக்கை நேற்று ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏஇடி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்வை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடராஜன் (ஈரோடு), பூங்குழலி (பெருந்துறை) ஆகியோர் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தனசேகர், முத்துசாமி, நித்யா ஆகியோர் மேற்கொண்டனர். இந்த வாகன தணிக்கையை ஈரோடு கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 100 பள்ளிகளில் இயக்கப்படும் மொத்தம் 1,096 வாகனங்கள் கூட்டாய்வு செய்யப்பட்டது.
தனியார் பள்ளி வாகனங்களில் அரசின் விதிமுறைகளின்படி பிளாட்பார்ம்,இருக்கைகள், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர கால வழி கதவு, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, முதலுதவி உபகரணங்கள், வாகனத்தில் முன், பின் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா?,
வாகனங்களின் இருபுறத்தில் குறிப்பிட்ட அளவுகளில் பள்ளியின் பெயர், நிர்வாகத்தின் தொடர்பு எண், வட்டார போக்குவரத்து அலுவலர்,போலீஸ் ஸ்டேஷன் தொடர்பு எண்கள் உள்ளனவா?, வாகனங்களில் மாணவ, மாணவிகள் ஏறி செல்ல ஏதுவாக ஒரு அடி உயரத்தில் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளதா?, புத்தகப்பைகள் வைக்க தனி இடம் உள்ளதா?, வாகனத்தின் பின்புறம் பிரதிபலிப்பான் ஸ்டீக்கர் ஒட்டப்பட்டுள்ளதா?, டிரைவர்கள் வாகன லாக் புக் முறையாக பராமரிக்கின்றனவா? குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பள்ளி வாகனங்களில் உதவியாளர் (அட்டென்டர்) நடத்துனர் சான்றிதழ் பெற்றுள்ளாரா? எனவும் ஆய்வு மேற்கொண்டு, இவைகளை உறுதி செய்த பின்னரே வாகனங்களை இயக்க அதிகாரிகள் அனுமதி சான்றிதழ் வழங்கினர்.
சில பள்ளி வாகனங்களில் குறிப்பிட்ட குறைபாடுகள் இருந்தததால் அதனை சரி செய்த பின், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனத்தை காண்பித்து சான்றிதழ் வாங்கி கொள்ளுமாறும் சம்மந்தப்பட்ட பள்ளியின் ஓட்டுநருக்கு அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமார், தாசில்தார் முத்துகிருஷ்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோபி, பவானியில் தணிக்கை
ஈரோடு மாவட்டம் கோபி வட்டார போக்கவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 60 பள்ளிகளை சேர்ந்த 463 வாகனங்கள் வருகிற 19ம் தேதி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தணிக்கை செய்ய உள்ளனர். அதேபோல், பவானி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 35 பள்ளிகளை சேர்ந்த 358 வாகனங்கள் வருகிற 20ம் தேதி தணிக்கை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
