மாயாற்றில் குளிக்கும் வளர்ப்பு யானைகளை கண்டு ரசிக்கும் வெளிமாநில சுற்றுலா பயணிகள்

கூடலூர் : யானைகளின் நடமாட்டம் மற்றும் அவற்றின் நடவடிக்கைகளை தொலைவில் இருந்து பார்த்து ரசிப்பது மனதுக்கு இதமான காட்சிகள் ஆகும். அதிலும் ஆறு, குளங்களில் யானைகள் குளிக்கும் காட்சிகள் மேலும் ரசிக்க தூண்டும்.

இந்த வகையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் ஆற்றில் குளிக்கும் காட்சிகள் காண்போரை பரவசப்படுத்தி வருகின்றன.கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரன்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம்கள் உள்ளன. அபயாரன்யம் முகாமில் 10 பெரிய யானைகளும், தெப்பக்காடு முகாமில் 14 பெரிய யானைகள் மற்றும் 3 குட்டி யானைகள் என மொத்தம் 27 யானைகள் உள்ளன.

இந்த யானைகள் அனைத்தும் தினமும் இங்குள்ள வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றில் குளிக்க வைக்கப்படுகின்றன. குறிப்பாக, அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வரும் தெப்பக்காடு பகுதியில் ஓடும் மாயாற்றில் யானைகள் குளிக்கும் காட்சி இங்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானைகள் குளிக்கும் காட்சிகளை ரசித்து பார்க்கின்றனர். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இங்குள்ள யானைகள் ஆற்றில் குளிக்க வைக்கப்படுகின்றன. யானைகள் குளித்து முடிந்த பின்னரே அவற்றிற்கு காலை மற்றும் மாலை நேர உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

யானைகள் குளிக்கும் காட்சிகள் மட்டுமின்றி யானைகளுக்கு உணவு வழங்கும் காட்சிகளையும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர். ஒரே இடத்தில் அடுத்தடுத்து பல யானைகள் குளிக்கும் காட்சிகளை இங்கு பார்க்க முடியும். தெப்பக்காடு பகுதியில் யானைகள் குளிக்கும் காட்சியை பார்த்து ரசிப்பதற்கு ஆற்றின் மேடான பகுதியில் இருக்கையில் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு அமர்ந்தவாறு ஆற்றில் யானைகள் குளிப்பதை பார்த்து ரசிக்க முடியும்.

யானைகளை பாகன்கள் அழைத்து வந்து ஆற்றில் இறக்கி சாய்ந்து படுக்க வைத்து குளிக்க வைக்கும் காட்சிகள், ஆற்றில் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று யானைகள் குளிக்கும் காட்சிகள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு பெரிதும் விருந்தளித்து வருகின்றன.

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளின் பராமரிப்பு நடவடிக்கைகள் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றது. கோடை விடுமுறையை ஒட்டி முதுமலைக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆற்றில் யானைகள் குளிக்கும் காட்சிகளை பார்த்து ரசித்து வருகின்றனர்.

Related Stories: