×

நீட் வினாத்தாள் கசிவு கைதான 5 பேரை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி: டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

 

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகளையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று அனுமதி வழங்கியது. நாடு முழுவதும் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்த சிபிஐ, நாசிக்கை சேர்ந்த சுபம் கைர்னார், ஜெய்ப்பூரை சேர்ந்த மங்கிலால் பிவால், விகாஸ் பிவால், தினேஷ் பிவால், குருகிராமை சேர்ந்த யாஷ் யாதவ் ஆகியோரை கைது செய்துள்ளது. உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவர்கள் 5 பேரும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நேற்று அவர்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குப்தா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, கைதான 5 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கினார். இந்த விசாரணையின் மூலம், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நீட் தேர்வு ரத்தை கண்டித்து டெல்லியில் பல்வேறு மாணவர் அமைப்பினர் நேற்றும் தேசிய தேர்வு முகமை தலைமையகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags : Delhi CBI court ,New Delhi ,Delhi CBI ,court ,NEET ,
× RELATED பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள்...