×

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப்பின் கேரள முதல்வராக வி.டி.சதீசன் தேர்வு: 18ம் தேதி பதவியேற்கிறார்

 

திருவனந்தபுரம்: கேரளத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாக புதிய முதல்வராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டார். கேரளத்தில் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் ஒரு சில நாட்களிலேயே முதல்வரை தேர்வு செய்து விடுவோம் என்று தேர்தலுக்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். ஆனால் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் அமோக வெற்றி பெற்று 10 நாட்கள் கடந்த பின்னரும் முதல்வரை தேர்வு செய்ய முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் கடும் சிக்கல் ஏற்பட்டது. முதல்வர் பதவிக்கு கடந்த பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசனுக்கும், மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரமேஷ் சென்னித்தலாவுக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்பியுமான கே.சி. வேணுகோபால் திடீரென இந்தப் போட்டியில் மூன்றாவது நபராக களத்தில் குதித்தார்.

இதன்பிறகு தான் முதல்வரை தேர்வு செய்வதில் கடும் குழப்பம் ஏற்படத் தொடங்கியது. ஆனாலும் சதீசனும், ரமேஷ் சென்னித்தலாவும் விட்டுக் கொடுக்காமல் போராடினர். இந்தநிலையில் இறுதி முடிவு எடுப்பதற்காக டெல்லியில் நேற்றுமுன் தினம் மாலை மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டுக்கு சென்ற ராகுல்காந்தி அவரிடம் ஆலோசனை நடத்தினார். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேல் நடந்த இந்த ஆலோசனையில் முதல்வராக வி.டி. சதீசனை தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் கேரள மாநில பொறுப்பாளருமான தீபா தாஸ் முன்ஷி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக கேரளத்தில் நீடித்து வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. கேரள முதல்வர் வி.டி சதீசனின் பதவியேற்பு விழா வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் மத்திய ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, எம்பி., காங்கிரஸ் மாநில முதல்வர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக முதல்வர் விஜய்யும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : V.D. Satheesan ,Kerala ,Thiruvananthapuram ,Congress ,
× RELATED பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள்...