×

பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியலாம்: கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடையை, கர்நாடக காங்கிரஸ் அரசு நீக்கியுள்ளது. கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள அரசு பி.யு, கல்லூரியில், கடந்த 2021ம் ஆண்டு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் கல்லூரிக்குள் நுழைய நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள், இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, ‘கல்லூரி வளாகத்திற்குள் ஹிஜாப் அணிந்து வரலாம். வகுப்பறையில் சீருடை மட்டும் அணிய வேண்டும்’ என கல்லுாரி நிர்வாகம் கூறியது. அதை மாணவிகள் ஏற்க மறுத்தனர். இந்நிலையில், ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு போட்டியாக, இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வகுப்புகளுக்கு வந்தனர். இதனால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதனால் அப்போதைய பா.ஜ. அரசு, கல்வி நிறுவனங்களில் சீருடை மட்டும் அணிவதை கட்டாயமாக்கி, மத ரீதியிலான ஆடைகளை அணிய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில், கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘கர்நாடக கல்வி சட்டம், 1983 விதிகளின் கீழ், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய கூடாது என, 2022ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்ப பெறப்படுகிறது.

மாணவர்கள் பள்ளி சீருடைகளுடன் ஹிஜாப் அணிந்து வரலாம். அதுமட்டுமின்றி, மத சின்னங்களை அடையாளப்படுத்தும் பூனூல், சிவதாரா, ருத்ராட்சம் ஆகியவற்றையும் அணிந்து வரலாம், இவற்றை அணிந்து வரும் மாணவ- மாணவியர் வகுப்பறைக்குள் வர அனுமதி மறுக்க கூடாது. மத சின்னங்களை அணியுமாறும், அகற்றுமாறும் எந்த மாணவரையும் கட்டாயப்படுத்த கூடாது’ என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாமிய மாணவிகள், ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு செல்ல உள்ளனர்.

Tags : Karnataka government ,Bengaluru ,Karnataka Congress government ,PU ,Udupi, Karnataka ,
× RELATED அரசியல் சாசன அமர்வு விசாரணை நிறைவு சபரிமலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு