மாவட்டத்தில் 3வது கட்டமாக மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஊட்டி, மாா்ச் 2:  நீலகிரி மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக 53 மையங்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று துவங்கியது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 4 கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 4,217 பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசிகள் போடப்பட்டது. 2ம் கட்டமாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக தடுப்பூசி போட்டு கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு 28 நாட்களுக்கு பிறகு 2வது சுற்று தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இதுவரை 9,250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நீலகிரியில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.

இதனிடையே மூன்றாவது கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு உள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் 6 அரசு மருத்துவமனைகள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 தனியார் மருத்துவமனைகள் என 53 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தி தடுப்பூசி போட்டு கொள்ளலாம். தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கடவு சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும்  60 வயதிற்கு மேற்பட்ட 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

  இது குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி கூறுகையில், ‘நீலகிரி மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இணைநோய் உள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று (நேற்று) துவங்கியுள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 10 தனியார் மருத்துவமனைகள் உட்பட 53 இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி மருந்துகள் போதுமான அளவு உள்ளது. மேலும் 17 ஆயிரத்து 600 டோஸ் மருந்துகள் வர உள்ளது, என்றார்.

Related Stories:

>