படப்பை அருகே 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்; பயணிகள் தப்பினர்

தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து தடம் எண் 55 எம் என்ற அரசு பஸ் நேற்றிரவு ஒரகடம் அடுத்த குருவமேடுக்கு புறப்பட்டது. பஸ்சில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பயணித்தனர். கோபாலகிருஷ்ணன் என்பவர், பஸ்சை ஓட்டி சென்றார். படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி சாவடி அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறமாக சென்று 10 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் உட்பட 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு பஸ்சில் சிக்கி தவித்த டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் என அனைவரும் பஸ்சின் பின்பக்க கண்ணாடி வழியாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து படப்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையில் 108 ஆம்புலன்ஸ், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சும் மீட்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் டிரைவர் கோபாலகிருஷ்ணன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: