குன்னூர்: நீலகிரியில் முதன்முறையாக அறிமுகமான ஜப்பான் ‘மாச்சா’ டீத்தூள் கிலோ ரூ.25,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் தேயிலை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு சர்வதேச தரத்தில் விற்பனை செய்யப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது.
குன்னூர் அருகேயுள்ள பெட்போர்டு பகுதியில் அமைந்துள்ள ‘டேஞ்ஜோ டீ’ என்ற தனியார் தேயிலை விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 300க்கும் மேற்பட்ட தேயிலை ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு கப் டீ குறைந்தபட்சம் ரூ.25 முதல் அதிகபட்சம் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை நிலையத்தில் முதன்முறையாக ஜப்பானின் புகழ்பெற்ற ‘மாச்சா டீ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் மாச்சா டீ ஒரு கிலோ ரூ.25,000க்கும், இந்திய மாச்சா டீ கிலோ ரூ.19,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜப்பானிய கலாச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாச்சா தேயிலை, அறுவடைக்கு 3-4 வாரங்களுக்கு முன்பே நிழலில் வளர்க்கப்படுகிறது. இதனால் இதில் குளோரோபில் சத்து அதிகரித்து, அடர் பச்சை நிறத்தையும் தனித்துவமான சுவையையும் தருகிறது. இலைகள் கைகளால் பறிக்கப்பட்டு, கல் உரலில் நுணுக்கமாக பொடி செய்யப்பட்டு இது தயாரிக்கப்படுகிறது.
