சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

பொன்னேரி: பொன்னேரியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தெப்பல் உற்சவம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பொன்னேரி திருவாயர்பாடியில் அருள் பாலிக்கும்  கரிகிருஷ்ண பெருமாள் ஆலய சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் கரிகிருஷ்ண பெருமாள் சிம்ம, அனுமந்த, புன்ன, அன்ன, வாகனத்தில் எழுந்தருளி முக்கிய மாட வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கரிகிருஷ்ண பெருமாளும் அகதீஸ்வரரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழாவும், கரிகிருஷ்ண பெருமாள், தேவி, பூதேவி, சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் தேர் திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றன. விழாவின் 11வது நாளான நேற்றிரவு ஆலயத்தின் புஷ்கரணியில் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பல் உற்சவம் கோலாகலமாக நடந்தது. கரிகிருஷ்ண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவை பகலாக மாற்றிய வாண வேடிக்கைகளுடன் புஷ்கரணியை 3 முறை வலம் வந்த தெப்பலை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பரவசத்துடன் வழிபட்டனர். தெப்ப உற்சவ திருவிழாவையொட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து எம்பெருமானை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: