சிக்கெனப் பற்ற, பட்டென விட வேண்டும்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 118 (பகவத்கீதை உரை)

‘‘நான் வனானி விஷ்ணு’’ என்று பரந்தாமன் அறிவித்ததில் இயற்கையோடு இயைந்தவன்தான் இறைவன் என்ற உண்மையை அனைவருக்கும் உணர்த்துகிறார். அதனாலேயே நைமிசாரண்யம் என்ற வனமாகவே அவர் இன்றும் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இந்தத் திருத்தலம் 66ஆவதாகப் போற்றப்படுகிறது. சிறப்பு மிக்க யாகம் மற்றும் தவம் புரிய சரியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார் சௌனக முனிவர்.

எந்தப் பணிக்குமே அதை ஆற்றும் இடம், சுற்றுச் சூழல் எல்லாம் பொருந்தி வந்தால்தான் அந்தப் பணி முழுமை பெறும், மனதிலும் நிம்மதி நிலவும். (யோகப் பயிற்சியை மேற்கொள்ள இடத்தையும், ஆசனத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையை ஏற்கெனவே கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு வர்ணித்திருந்தாரே அதே முறையில்) அந்த வகையில் தம் முனிப்பணிக்குத் தோதான இடம் சரியாகக் கிடைக்காததால், அவர் பிரம்மனிடம் அப்படி ஓர் இடத்தைத் தனக்கு அடையாளம் காட்டுமாறு கேட்டுக் கொண்டார். பிரம்மனாலும் உடனே அப்படி காட்டிவிட முடியவில்லை. உயிர்களைப் படைப்பவன் என்றாலும், அந்த உயிர்களுக்கெல்லாம் நற்கதி அளிக்கும் பரந்தாமனைவிட வேறு யாரால் முனிவரின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க முடியும்? ஆனால், அவர் தன்னிடம் வந்து கேட்டுக் கொண்டதால், பரம்பொருளின் ஆக்ஞைப்படியே அது நிறைவேற வேண்டும் என்றே பிரம்மன் கருதினார்.

இதற்காக நேரே நாராயணனிடம் போய், சரியான இடத்தைக் காட்டுமாறு கேட்டு அவரைத் தொந்தரவு செய்ய வேண்டுமா என்றும், பகவானுக்கு இருக்கக் கூடிய பல்வேறு பொறுப்புகளிடையே இதையும் கேட்டு அவரை சிரமப்படுத்துவானேன் என்றும் பிரம்மன் யோசித்திருப்பார் போலிருக்கிறது. உடனே ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்தார். இரு முனைகளையும் முடிந்து அதை ஒரு சக்கரம் போல உருவாக்கினார். மனதுக்குள்ஸ்ரீ மந்நாராயணனை தியானித்துக் கொண்டார். பகவானின் சக்ராயுதமாக அதை பாவித்துக் கொண்டார். அந்தச் சக்கரத்தை உருட்டி விட்டார். பிறகு முனிவரைப் பார்த்து, “இந்தச் சக்கரம் உருண்டு போய் எங்கே நிலை கொள்கிறதோ அதுவே உங்கள் மனதுக்கிசைந்த, உங்கள் விருப்பத்தை ஈடேற்றக் கூடிய தலமாக அமையும்,” என்று சொன்னார்.

பெரிதும் மகிழ்ந்த சௌனகர் அந்தச் சக்கரத்தைப் பின்தொடர்ந்தார். அது பூலோகத்தில் ஒரு காட்டுப் பகுதியில் விழுந்து நின்றது. அந்த இடம், நேமி என்ற சக்கரம் விழுந்த ஆரண்யம் (காடு) அதாவது நைமிசாரண்யம் என்று புகழ் பெற்றது. முனிவருக்கு அசரீரியாக, ‘நான் இங்கே வனானி விஷ்ணுவாகப் பரந்திருக்கிறேன்,‘ என்று தன் ‘இருப்பை‘ அறிவித்தார், பரந்தாமன். இறைவன் எங்கும், எதிலும் வியாபித்திருப்பவன் என்பதற்கு இந்த நைமிசாரண்யம் ஓர் எடுத்துக்காட்டு.

ஆமாம், இங்கே பகவான் வன ஸ்வரூபனாகவே விளங்குகிறார். இங்கேயே வசிப்பவர்களும் திவ்ய தேச திருத்தல யாத்திரை மேற்கொண்டிருக்கும் பக்தர்களும், இந்தக் காட்டையே திருமாலாக பாவித்து வணங்குகிறார்கள். இந்த வகையில், தான் இயற்கையிலிருந்து வேறுபட்டவன் அல்ல என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறார் பரந்தாமன். இயற்கையின் ஓர் அம்சமான கால நேரத்திலும் தான் கலந்திருப்பதை, ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று குறிப்பிட்டதன் மூலம் உணர்த்துகிறார்.

‘கூறியது கூறல்‘ என்ற விளக்க முறையால் அர்ஜுனனை, அவர் போருக்கு தயார் செய்கிறார். இந்த பகவத் கீதை உத்தியை திருவள்ளுவரும் கடைப் பிடித்திருக்கிறார். கிருஷ்ணனைப் போலவே ஒரே கருத்தை பத்து முறை வெவ்வேறு வார்த்தைகளில், மீண்டும் மீண்டும் சொல்லி, வலியுறுத்தியிருக்கிறார். அதனால்தான் 133 கருத்துகள் (அதிகாரங்கள்); ஒவ்வொன்றுக்கும் பத்து குறட்பாக்கள். ஆக மொத்தம் 1330 குறள்கள்! பள்ளிக்கூட ஆசிரியர் மேற்கொள்ளும் வழி போலத்தான் இது. தன்னுடைய மாணவர்களுக்கு ஒரு பொருளைத் தெளிவாக்க எத்தனையோ விளக்கங்களை அவர் திரும்பத் திரும்ப, மாற்றி மாற்றிச் சொல்கிறார் அல்லவா, அதுமாதிரி.

இவ்வாறு இயற்கை மூலம் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட கிருஷ்ணன், ஒன்றாகவே கருதப்படும் அனைத்து ஜீவர்களுடனும் தான் தொடர்பு கொண்டவன் என்கிறார். இதை அடுத்த ஸ்லோகம் விளக்குகிறது.

யோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்யதி
தஸ்யாஹம் ந ப்ரணச்யாமி ஸ ச மே ந ப்ரணச்யதி (6:30)

‘‘யார் என்னை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் என்னிடத்திலும் காண்கிறானோ, அவனுடைய பார்வையிலிருந்து நான் மறைவதில்லை; என் பார்வையிலிருந்தும் அவன் மறைவதில்லை!‘‘எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பது, அடிப்படையில் ஒழுக்கம், சுத்தம் போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொள்ள உதவும். அடுத்தடுத்து மரியாதை, அலட்சியமின்மை ஆகிய குணங்களும் வளரும். இதன் விளைவாக மென்பேச்சு, பரோபகாரம், தானமளிக்க விழைதல் ஆகியன தோன்றும். நிறைவாக, தன்னடக்கம், தேவை அடக்கம், எல்லாம் கைவரப் பெற்று துறவு நிலையை அடைந்து யோகியாகலாம்.

எல்லா உருவ இனிப்புகளுக்கும் ஒரே ஆதாரம்தான் – சர்க்கரை. எந்த உருவமானாலும் அவை தருவது ஒரே சுவை – இனிப்பு. இதைத்தான் கிருஷ்ணன் சொல்கிறார்.சாலையில் போய்க் கொண்டிருந்தான் ஒருவன். சற்றுத் தொலைவில் எதிரே ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்தக் காரில் அவன் கடவுளைக் கண்டான். ஆகவே தன் தடத்தை மாற்றிக் கொள்ளாமல் அதே நேர்க்கோட்டில் தொடர்ந்து நடந்தான். சில விநாடிகளுக்குள், தன் வேகத்தைக் குறைத்து விட்டாலும், கார் அவன் மீது மோதிய பிறகுதான் நின்றது. ‘‘எல்லாவற்றிலும் உன்னைக் கண்டேனே இறைவனே, எனக்கு இப்படிஒரு துன்பத்தைக் கொடுத்து விட்டாயே!” என்று அவன் அழுது புலம்பினான்.

‘‘என்னை காரில் கண்டாய். ஆனால் அந்த காருக்குள் ஓட்டுநராகவே என்னைக் காண ஏன் மறந்தாய்? நான் பலமுறை ஹாரன் அடித்தும் அந்த தெய்வீக எச்சரிக்கையை ஏன் அலட்சியப்படுத்தினாய்?” என்று கடவுள் அவனிடம் கேட்டார்!வேடிக்கைக்காகச் சொல்லப்பட்ட கதைதான் என்றாலும், எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் ஒருவனுக்கு, அவர் அவ்வப்போது விடுக்கும் எச்சரிக்கைகளும், யோசனைகளும் மனதில் எதிரொலிக்கும். ஆனால் அதைப் புரிந்து கொள்ள அவனால் முடிவதில்லை. ‘தற்செயலாக நடந்தது,’ ‘தெய்வாதீனமாக நிகழ்ந்தது’, ‘அதிசயம் நடந்தது’, என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோமே, அதெல்லாம், இறைவன் நம் உள்ளுணர்வுக்குள் அவ்வப்போது அறிவுறுத்தியதாலும், அதன்படி நாம் நடந்து கொண்டதாலும் அல்லது அவ்வாறு நமக்கு நேர்வதாலும்தான்.

எல்லாவற்றிலும் கடவுளைக் காண முடிந்தவன் அந்தக் கடவுளிடமிருந்து எப்போதும் பிரியாதவனாக இருக்கிறான். இறைவனும் அவனை விட்டு விலகாத வனாக இருக்கிறான். இந்த மனப்பக்குவமானது அனைத்தையும் உருவாக்கியவன் ஆண்டவனே என்ற உண்மையைப் புரிய வைக்கிறது. தந்தையின் சாயலில் பிள்ளைகள் அமைவது போல. ஆனால் அந்த ‘ஒன்றிய’ புரிதல் இல்லாததால்தான் தந்தை – மகனுக்கிடையே தேவையில்லாத வாக்குவாதம், கோபம், சண்டை, பிரிதல், எல்லாம். அப்படி புரிந்து கொள்ள முடியாமல் தடுப்பது ஈகோ என்ற மன ஆதிக்கம்.

அப்படி எல்லாவற்றிலும் அவற்றைப் படைத்தவனை அடையாளம் கண்டு கொள்ளும் நேர்த்திதான் இறைவனுடனான ஞானத் தொடர்பை யோகியிடம் வளர்க்கிறது. பிற தொடர்புகளைப் பளிச்சென்று விட்டுவிட முடிந்த யோகியால்தான், இறைவனுடனான ஞானத் தொடர்பை மேற்கொள்ள முடியும். ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் ஒரு செல்வந்தன் வந்தான். தான் உடன் கொண்டு வந்திருந்த ஆயிரம் தங்க நாணயங்களை அவருடைய காலடிகளில் கொட்டினான். ‘‘என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்,” என்று மன்றாடினான். ‘‘எனக்கு உங்கள் அனுக்ரகம் வேண்டும்.”பரமஹம்ஸர் அவனைப் பார்த்துச் சிரித்தார். ‘‘இப்போது கொண்டு வந்து கொட்டினாயே, இது என்ன?” என்று கேட்டார்.

‘‘தானம்,” அவன் உற்சாகமாக பதிலளித்தான். ‘‘உங்களுக்கு நான் அளிக்கும் தானம்.” ஆனால் இதை ஓசையின்றி செய்யலாமே? இப்படி என் முன்னால் தரையில் கொட்ட, இவைதான் எத்தனை சத்தம் போடுகின்றன! அதோ பார், தொலைவிலிருப்பவர்கள்கூட இந்த சத்தத்தால் ஈர்க்கப்பட்டு இங்கே வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்!”முற்றும் துறந்த அவருக்கு முன்னால் தன் தானத்தை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது என்று அவனுக்குத் தோன்றி விட்டது. ‘‘மன்னியுங்கள் சுவாமி. நான் தவறு செய்துவிட்டேன். அப்படி செய்திருக்கக் கூடாது. என் தானத்தை ஏற்றுக் கொண்டு என்னைப் புனிதனாக்குங்கள்,” என்று கெஞ்சினான்.

‘‘நான் எதையும் ஏற்றுக் கொள்வேன். என் மீது யார் வசை பாடினாலும் அதுவும் எனக்கு ஏற்புடையதே!” என்று அவனுக்கு பதிலளித்தார் பரமஹம்ஸர். ‘‘ஆனால் நீயோ ஆயிரம் பொற்காசுகளை எனக்குத் தந்திருக்கிறாய். சரி, இந்த ஆயிரம் பொற்காசுகளையும், என் சார்பில் நீ கங்கை ஆற்றில் எறிந்துவிட்டு வா,” என்று அவனுக்கு உத்தரவிட்டார். திகைத்தான் அவன். ஆனாலும், அவருக்கென்று கொண்டு வந்தாயிற்று; அவரிடமும் சமர்ப்பித்தாயிற்று. அதெல்லாம் அவருக்கே சொந்தம். இப்போது அவரே அவற்றை கங்கையில் எறிந்துவிட்டு வரச் சொல்கிறார். அப்படியே செய்வோம் என்று நினைத்துக் கொண்டான். பொற்காசுகளைத் திரட்டி எடுத்துக் கொண்டு போனான். ஆனால் அவன் திரும்ப வெகு நேரமாயிற்று!

பரமஹம்ஸருடன் இருந்தவர்கள், அவன் மனம் மாறி, தானம் அளித்த அந்த தனத்தைத் தானே திரும்ப எடுத்துக் கொண்டு ஓடி விட்டானோ என்றும் ஐயுற்றார்கள். அவர்களில் சிலரை அவர் கங்கையாற்றங்கரைக்கு அனுப்பிவைத்தார். அவன் என்னதான் செய்கிறான் என்று பார்க்கச் சொன்னார். சென்ற அவர்கள் கவனித்ததில், அவன் மீண்டும் அவற்றைத் தனக்குரியதாக ஆக்கிக் கொள்ளவில்லை; கங்கை நதியில்தான் எறிகிறான் என்பதைக் கண்டார்கள். ஆனால் எப்படி? ஒவ்வொன்றாக. ஒன்றன் பின் ஒன்றாக! ஒவ்வொரு காசையும் சுண்டிப் பார்த்து, தட்டிப் பார்த்து, ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்துக் கொண்டு… அறுநூற்று ஆறு, எண்ணூற்றுப் பத்து, தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டு…. அவன் செய்வதை மிகவும் அதிசயமாகப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம் கூடிவிட்டது.

சிலநேரம் கழித்து அவன் வியர்க்க, விறுவிறுக்க பரமஹம்ஸரிடம் திரும்பி வந்தான். இதற்குள் அவன் என்ன செய்கிறான் என்று பார்க்கச் சென்றவர்கள் மூலம் விவரம் தெரிந்து கொண்ட பரமஹம்ஸர் அவனிடம், ‘‘நீ ஏன் இத்தனை சிரமப்பட்டாய்? ஒட்டு மொத்தமாகப் பையோடு அப்படியே தூக்கி எறிந்துவிட்டு வரவேண்டியதுதானே? ஒவ்வொன்றாக, எண்ணி, எண்ணி எறிந்திருக்கிறாயே!” என்று கேட்டார்.செல்வத்தைச் சேகரிக்கும்போது எண்ணி, எண்ணி சேகரிப்பதில் ஓர் அர்த்தம் இருக்கிறது.

அது எவ்வாறு அதிகரிக்கிறது என்று பார்க்க கணக்கு வைத்துக் கொள்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் மொத்தத்தையும் விட்டு விடுபவன் எதற்காக எண்ண வேண்டும்? கலகலவென்று கொட்டி தன் தானத்தை விளம்பரப்படுத்திக் கொள்வதும், கங்கையில் எறியும்போது ஒவ்வொரு காசாக எண்ணுவதும், இன்னும் அந்தக் காசுகளின் பிடியிலிருந்து அவன் விடுபடவில்லை; விடுபடத் தயாராக இல்லை என்பதைத்தானே காட்டுகின்றன!உலகாத தொடர்புகளைப் பட்டென்று விட்டுவிட முடிந்தவனால்தான் இறைவனுடன் ஞானத் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும், அதனைத் தொடரவும் முடியும்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

 

Related Stories: