திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை-11-5-2026
திருமுனைப்பாடி நாடு பெண்ணையாறு பாய்வதால் வளம் பெற்றது.
திருநாவுக்கரசரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் பிறந்த பெருமை பெற்ற நாடு திருமுனைப்பாடி. திருவாமூர் இந்நாட்டில் இருக்கும் ஒரு ஊர்.
வேளாளர் குடியில் பிறந்த புகழனார் என்பவரின் மனைவி மாதினியார். இவர்களின் மூத்த மகள் திலகவதியார். சில ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் மருள்நீக்கியார்.
மருள்நீக்கியார் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். மருள்நீக்கியார் கல்வி கற்று வந்த நேரத்தில், திலகவதியாருக்கு பன்னிரண்டு வயது. அப்போது அவருக்கு கலிப்பகையார் உடன் திருமண ஒப்பந்தம் நடந்தது. கலிப்பகையார் போரின் நிமித்தம் வடநாடு செல்ல, புகழனார் நோய்வாய்ப்பட்டு காலமானார். மாதினியாரும் மாறாத்துயரால் மரித்துப் போனார். போருக்குச் சென்ற கலிப்பகையாரும் காலமானார்.
‘எனது பெற்றோரின் விருப்பம் என்னைக் கலிப்பகையாருக்கு மணம் முடிப்பதே, அவர் மரித்தபின் இனி நானும் உயிர் துறப்பேன்’ என்ற திலகவதியாரின் பாதம் பணிந்து தடுத்தார், மருள்நீக்கியார்.
தம்பியின் வாழ்விற்காக மணம்புரிந்து கொள்ளாமல் தவ வாழ்க்கையை மேற்கொண்டார் திலகவதியார்.
வாழ்வின் நிலையாமையை உணர்ந்த மருள்நீக்கியார் கொல்லாமையை கடைப் பிடிக்கும் சமண சமயத்தில் சேர்ந்தார்.
பாடலிபுத்திரம் என்ற ஊரில் உள்ள சமணக் கோயிலுக்கு பயணம் செய்தார். பல சமண சமய நூல்களை கற்றறிந்தார். சமணர்கள் மருள்நீக்கியாருக்கு தலைமைப் பதவி தந்து தருமசேனர் எனும் பட்டமும் தந்தனர்.
தருமசேனர் பௌத்தர்களை வாதில் வென்று சமண சமயத்தை மேம்படுத்தினார்.
திலகவதியார் வீரட்டானத் தலமாகிய திருவதிகை (பண்ருட்டி) அடைந்து சிவச் சின்னம் தரித்து, பல திருப்பணிகள் புரிந்தார். சிவத்தொண்டு புரியாமல் தனது தம்பி சமண சமயம் தழுவியது திலகவதியாருக்கு பெரும் உறுத்தலாக இருந்தது. சிவனைப் பணிந்து தன் தம்பியை மீட்டருளுமாறு வேண்டினார்.
சூலை எனும் கடும் வயிற்றுவலி மருள்நீக்கியாரைப் பற்றியது. சமணர்களின் மந்திரங்கள் ஏதும் பலன் அளிக்காமல், சூலை நோயின் கடுமை இன்னமும் அதிகரித்தது. சமணர்கள் இதை தீர்க்க இயலாது எனக் கைவிரித்த நிலையில், மருள்நீக்கியாருக்கு திலகவதியாரின் நினைவு வந்தது. தனது உதவியாளரை அக்காவிடம் அனுப்பிவைத்தார்.
திலகவதியார் சமணர் இருக்குமிடம் தான் வர இயலாது என மறுத்தார். தனது சூலைநோய் தீருமெனில் சைவ சமயம் சேருவேன் என திருவதிகை நோக்கி பயணம் தொடங்கினார் மருள்நீக்கியார்.
திலகவதியாரின் மடத்தை அடைந்து அவரது பாதம் பணிந்தார். பஞ்சாட்சரம் ஓதி திலகவதியார் தந்த திருநீறு தரித்தவுடன் மருள்நீக்கியாரின் சூலைநோய் நீங்கியது. அவர் ஈசனின் புகழ்பாடும் சக்தி பெற்றார்.
அவர் பாடிய பதிகங்களைக் கேட்ட எம்பெருமான் “நாவுக்கரசு எனும் பெயர் பெறுக!”, என்றார்.
உலகம் என்பது வலிமையுள்ளவர்களுக்கான விளையாட்டுத்திடல். பாடலிபுத்திரத்தினர், மருள்நீக்கியார் சைவ சமயம் தழுவியதால் சூலைநோய் நீங்கியது என்பதை சகிக்க முடியாமல் தவித்தனர். இனி மெல்ல சமணம் சாயும் என்ற கவலை அவர்களை சூழ்ந்தது. வஞ்சனையை தங்கள் வலிமையாகக் கொள்ள முடிவு செய்தனர்.
புகாரை முதலில் வைப்பவரை அரசன் நம்புவான். அக்காவும் தம்பியும் இணைந்து சூலை நோய் தீர்க்கும் நாடகம் நடத்தினர் என பல்லவ அரசனிடம் பொய் புகாரளிக்கச் சென்றனர்.
கொல்லாமையை வெறும் கொள்கையாக மட்டிலும் கொண்ட சிலர், நாவுக்கரசருக்கு தண்டனையளிக்க அரசனின் ஆணையைப் பெற்றனர். திருவதிகை சென்று நாவுக்கரசரை அழைக்க, அவர் வர மறுத்ததையும் பல்லவ மன்னனிடம் தெரிவித்தனர்.
தண்டனை… அவரை சுண்ணாம்புக் காளவாயில் இட்டு, சுழலும் இரும்புக் கதவினால் அடைத்தார்கள்.
அந்தச் சுண்ணாம்புக் காளவாயின் வெப்பம் தாக்காமல், இளவேனிற் காலத்து தென்றல் காற்று வீசுவது போல் ஓர் இனிய சூழல் ஈசனின் அருளால் ஏற்பட்டது. சுண்ணாம்புக் காளவாயை ஏழுநாட்கள் கழித்து சமணர்கள் திறந்து பார்த்தபோது திருநாவுக்கரசர் உயிரோடு இருந்ததைக் கண்டு, ‘இவர் சமணர்களோடு இருந்தபோது கற்ற பயிற்சியால் உயிரோடு இருக்கிறார். எனவே இவருக்கு கொடிய நஞ்சை ஊட்டிக் கொல்லலாம்.’, என்று கோரிக்கை எழுப்ப,
அரசனும் ஏற்றான்.
‘நஞ்சும் அமுதமே ஆகும் அண்ணலின் அடியார்க்கு’ என்று கூறி அவர்கள் தந்த நஞ்சு கலந்த பாலடிசிலை உண்டார்.
நஞ்சே அமுதானது. திருநாவுக்கரசர் உயிர் பிழைத்தார். ‘இனி இவரை உயிரோடு விட்டால் சமணமும், ஆட்சியும் அழிவது உறுதி.’, என்று தெரிவித்தனர். ‘இனி இவரை யானையின் காலில் இடறச்செய்வதே சரியான தண்டனை’ என்றனர்.
அரச யானை மதநீர் ஒழுக, சகலரையும் சகலத்தையும் சிதறவிட்டு ஓடி வந்தது. மலைபோன்ற எமன் ஓடி வருவதுபோல் ஓடிவந்த யானையைக் கண்டு அஞ்சாமல், திருநாவுக்கரசர் ஈசனின் அடிகளை வணங்கி நின்றார்.
மதம் பிடித்து ஓடிவந்த யானை திருநாவுக்கரசரின் பாதம் பணிந்து எழுந்தது. பாகர்களைக் கொன்று சமணர்கள் மீது பாய்ந்தது. அடுத்து என்ன வாய்ப்பு இவரைக் கொல்ல என யோசித்த மன்னரும் சமணர்களும் திருநாவுக்கரசரை கல்லில் கட்டி கடலுக்குள் வீசலாம் எனத் திட்ட மிட்டனர். அதை சமணர்கள் உடனிருந்து நிறைவேற்றினர். ஆனால், கல் தெப்பமாக மாறி மிதக்கத் துவங்கியது.
கட்டப்பட்ட கல், பல்லக்கு ஆனது; அது திருப்பாதிரிப்புலியூர் என்ற இடத்தில் கரை ஒதுங்கியது. பின்னர் மீண்டும் திருவதிகை நோக்கிப் பயணித்தார். அங்கு பல பதிகங்கள் பாடிய அவர் பின்னர் தில்லையை அடைந்தார்.
அங்கிருந்து பல சிவத்தலங்களுக்கும் பாடிப் பயணித்தார். சீர்காழியில் அப்பரும் (திருநாவுக்கரசரும்) திருஞானசம்பந்தரும் சந்தித்தனர். பல திருத்தலங்களுக்கு சேர்ந்தே சென்று தரிசனம் செய்தனர்.
திங்களூரில் வாழும் அப்பூதியடிகள் என்பவர் நாவுக்கரசரின் பெருமையை உணர்ந்து, தன் மைந்தர்கள், சாலை, கிணறு, குளம், தண்ணீர்ப் பந்தல் என அனைத்திற்கும் ‘திருநாவுக்கரசர்’ என்ற பெயரை வைக்கும் பேரன்பு கொண்டவராக திகழ்ந்தார். அவர்களின் இல்லம் தேடி திருநாவுக்கரசர் அமுதுண்ணச் சென்றார். அவருக்கு அமுது படைக்க வாழையிலை அரிந்து வரச்சென்ற அப்பூதியடிகளின் மகன் பாம்பு தீண்டி மரணித்தான். அம்மரணத்தை மறைத்து நாவுக்கரசருக்கு அமுது படைக்க நினைத்த அத்தம்பதியினரை திருப்பழனம் கோயில் வாசலுக்கு பாம்பு தீண்டிய மைந்தனின் உடலைக் கொண்டுவரச் சொன்ன திருநாவுக்கரசர், பதிகம் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார். மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
திருவாரூர் செல்லும் முன் பழையாறை, வலஞ்சுழி போன்ற தலங்களையும் தரிசித்து திருவாரூர் அடைந்தார். தேவாசிரிய மண்டபத்தில் தொழுது மூலவரை அடைந்த அப்பர். ‘கைகள் இருந்தும் தொழாமல் வேறு சமயம் சென்றேனே!’, எனத் தன்னையே நொந்தார். ஆரூர் வீதிகளில் உழவாரம் செய்தார். திருப்புகலூர் வந்தடைந்த நாவுக்கரசர் ஞானசம்பந்தரிடம் ஆரூரில் தான் கண்ட ஆதிரை நாள் விழாவின் சிறப்பினை விளக்கினார். ஆவல் மிகுந்த ஞானசம்பந்தர் ஆரூர் செல்ல விரும்பினார். ஆரூர் சென்று திரும்பி மீண்டும் திருப்புகலூர் முருகனார் திருமடத்தில் இருந்திடும் நாளில், அங்கு மூன்று சிவனடியார்கள் வந்து சேர்ந்தனர்.
ஒரே சமயத்தில் ‘சம்பந்தர்’, ‘நாவுக்கரசர்’, ‘முருகர்’, ‘சிறுத்தொண்டர்’, ‘நீலநக்கர்’ என்ற ஐவரும் சந்தித்த அற்புத நிகழ்வானது நடந்தது. சம்பந்தரும், நாவுக்கரசரும் திருவீழி மலையில் இருந்த காலத்தில், மழை தவறியதால் காவிரி வறண்டது. வறுமையும் பஞ்சமும் சூழ்ந்தது. சகலருக்கும் உணவு படைக்க என்ன செய்வது என்ற கவலையோடு இருந்த சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரின் கனவில் தோன்றிய ஈசன், “என்னுடைய பீடத்தில் தினமும் யாம் வைக்கும் பொற்காசினை, கிழக்கில் இருப்பதை சம்பந்தரும், மேற்கில் இருக்கும் காசை நாவுக்கரசரும் எடுத்துக்கொண்டு, உரியவற்றைப் பெற்று உணவாக்கி, அடியவர் பசி தீர்ப்பீர்” என்று கூறி மறைந்தார்.
அவர்களும் நாள்தோறும் அக்காசுகளை எடுத்துச் சென்று, இருவரின் மடங்களிலும் உணவாக்கினர். “சிவனடியார்கள் அனை வரும் வந்து உண்பீர்” என இருபொழுதும் பறையறைந்து அறிவித்து சோறிட்டு, பலரின் வறுமை தொலைத்தனர்.
திருமறைக்காட்டில் மறைகள் வழிபட்டபின் பூட்டிய கோவில் கதவை திறக்க முயற்சிக்குமாறு, அப்பர், சம்பந்தர் இருவரும் அழைக்கப்பட்டனர். பல பதிகங்களை அப்பர் பாடியும் கதவு திறக்கவில்லை. ‘யாம் பாடுதலைக் கேட்டிலீர்! இரக்கம் இலீர்’ என்று பாடி இறைஞ்சினார். பூட்டப்பட்ட கதவு ஈசன் அருளால் திறந்தது.
அனைவரும் உள்ளம் மகிழ உள்ளே சென்று வழிபட்டு ஆனந்தக் கூத்தாடினர். திறந்த கதவை பூட்டப் பாடுமாறு சம்பந்தரை அப்பர் வேண்ட, ஈசனும் கதவடைத்தார். இவ்விருவர் மூலம் தினமும் திருவாயில் திறத்தல், அடைத்தல் என்ற வழக்கம் நிரந்தரமாக்கப்பட்டது.
பழையாறை வடதளியில் இருந்த மூலவரை சமணர்கள் மறைத்து வைத்திருப்பதை அறிந்த நாவுக்கரசர், சிவனைக் காணாது நீங்கேன் என உண்ணாநோன்பு இருந்தார். ஈசனும் அரசனின் கனவில் தோன்றி, “சமணர் மறைத்துள்ள எம் உருவம் வெளிப் படுத்துக!” என அறிவுறுத்த, அரசனும் அவ்விதமே பழையாறை சென்று நிவந்தங்கள் அளித்து, வழிபட வழிவகை செய்ய, அப்பர் மகிழ்ந்தார்.
அதன் பின்னர் அப்பர் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருவாலங்காடு, காளஹஸ்தி, ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் வழியாக வாரணாசி அடைந்தார். பின்னர் கைலாயம் நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்தார்.
தொடர் பயணம் அவரது கால்களை சோர்வுறச்செய்ய, முழங்காலிட்டு கைகளால் தவழ்ந்தார்; அதுவும் தேய, மார்பினால் உந்தி நகர்ந்தார். உடல் தேய்ந்தபோதும் அவருடைய உள்ளம் தேயாது, கைலாயம் நோக்கியே குவிந்திருந்தது.
அவரின் உள்ள உறுதியைக் கண்ட ஈசன், சிவனடியாராக அப்பர் முன் தோன்றி, அவரது கைலாய தரிசன ஆவலை அவரின் வாய்மூலம் அறிந்து, அவரை அங்கிருக்கும் ஒரு குளத்தில் மூழ்கி, திருவையாறு குளத்தில் எழுமாறு கூறினார். அங்கே கைலாய தரிசனத்தை தருவதாகவும் கூறினார். அவ்விதமாகவே கைலாய தரிசனத்தையும் தந்து நாவுக்கரசரின் உள்ளத்தைக் குளிர்வித்தார்.
அதன் பின்னர் அப்பர் பல தலங்கள் தரிசித்து திருப்பூந்துருத்தியில் இருக்கையில், சம்பந்தர் மதுரை சென்று சமணர்களை வாதில் வென்று வருவதை அறிந்து, “அந்த ஞானசம்பந்தரைச் சுமந்துவரும் பல்லக்கினை நான் தாங்குவேன்” என அப்பர், சம்பந்தரின் பல்லக்கைத் தாங்கினார்.
பூந்துருத்தி அடைந்த சம்பந்தர், ‘அப்பர் எங்குற்றார்?’ என வினவினார். ‘ஐயன், இங்குற்றேன்’ என்று மறுமொழி உரைத்தார் அப்பர்.
உள்ளம் பதைத்து பல்லக்கிலிருந்து இறங்கிய சம்பந்தர், அப்பரை வணங்கினார். அப்பர் வாரியணைத்து சம்பந்தரைத் தழுவினார். கூட்டம் சிவகோஷம் எழுப்பியது.
என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று இருந்த அப்பரின் உழவாரப் பணியையும் அவரது பற்றற்ற தன்மையையும் உலகிற்குக் காட்ட ஈசன், திருப்புகலூரில் அவர் புல்வெட்டும்போது பொன், மாணிக்கக் கற்களை உழவாரப்பணி செய்யும் இடத்தில் இறைத்தார். ‘இதென்ன இத்தனை கற்கள் இடைஞ்சலாக!’ என சகலத்தையும் வீசி எறிந்தார் அப்பர். விண்ணிலிருந்து வந்த பல தேவ மகளிர் நாவுக்கரசரை சலனப்படுத்த முயற்சித்ததும் தோல்வியையே தந்தது.
திருத்தாண்டகம் பாடிய நாவுக்கரசர் சித்திரை மாதம் சதயநாளில் எண்பத்தியோராவது வயதில் சிவபதவி அடைந்தார்.
இறைவன்: பசுபதீஸ்வரர்.
இறைவி: திரிபுரசுந்தரி
அவதாரத்தலம்: திருவாமூர்
முக்தித்தலம்: திருப்புகலூர்
குருபூஜைநாள்: சித்திரை – சதயம்
