கோடைகாலமும் அம்மன் கோயில்களும்

கோடை காலமான சித்திரை, வைகாசி மாதங்களில் கோயில் திரு விழாக்கள் அதிகமாக நடத்துவதைக் காணலாம். குறிப்பாக கிராமங்களில் உள்ள அம்மன் கோயில் களில் கோடை விழாக்களாக இந்த விழாக்கள் நடைபெறும். கோடை காலங்களில் கோயில் களில் அதிகமான விழாக்கள் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். விவசாயப் பணிகள் நிறைவடைந்து அடுத்து ஆடி பட்டத்துக்காக காத்திருக்கும் இடை வேளையில் உற்சாகமாக கோயில் விழாக்களில் மக்கள் ஈடுபடுவது வழக்கம். இந்த முதுவேனில் காலத்தை தெய்வங்களும் உகப்பார்கள். பக்தர்களும் உகப்பார்கள்.

தமிழர்கள் உகந்த கோடை விழா
உத்தராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரை தட்சணாயன காலம். உத்திராயன காலத்தை தேவர்களின் பகல் காலமாகவும் தட்சிணாயன காலத்தை தேவர்களின் இரவுக் காலமாகவும் கொள்ளும் மரபு உண்டு. ஓர் ஆண்டை கார்காலம், குளிர் காலம், முன்பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனில்காலம், முது வேனில்காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர். இந்த அறுவகை காலங்களில் இளவேனில் காலமும் முதுவேனில் காலமும் கோடை காலங்கள். இது கோயில் விழாக்களுக்கான காலம்.

கோடையில் வில்லவன் விழா
தமிழர் நிலப் பிரிவுகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. இதன்படி, முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; குறிஞ்சி நிலத்துக்குக் கூதர் காலமும், முன்பனிக் காலமும்; மருதத்துக்கும், நெய்தலுக்கும் எல்லாப் பருவகாலங்களும், பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில், முன்பனி ஆகிய காலங்களும் உரியவை. இளவேனில் விழா குறித்து கலித்தொகையில் உள்ளது. சித்திரை, வைகாசி ஆகிய வேனிற் பருவத்தில், காதல் தெய்வமான காமவேளுக்கு, ‘‘வில்லவன் விழா’’ கொண்டாடப்பட்டது.

சமூகமும் அம்மன் விழாக்களும்
கோயில் திருவிழாக்கள் என்பது சமூகம் ஒன்றாகக் கூடி நடத்தும் திருவிழா. எளிய மக்கள் கோடை கால கோயில் விழாவை வெறும் ஆன்மிக உணர்வோடு மட்டும் அணுகுவதில்லை. தங்களுடைய உழைப்புக்கான உறுதியையும் உற்சாகத்தையும் பெறவும், சமூகமாக இணைந்து வாழவும் இந்த விழாக்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அது மட்டும் இல்லாது, தங்களுடைய கலை உணர்வை வளர்த்துக் கொள்ளவும் இந்த விழாக்களைப் பயன்படுத்திக் கொண்டனர். பாரம்பரியமான இசை, நாடகம் போன்றவற்றை வளர்க்கும் களமாக இந்த விழாக்கள் விளங்குவது சிறப்பு. கோயில் திருவிழாக்கள் மூலம் தான் தெருக்கூத்து, நாட்டியம், இசை முதலிய கலைகள் வளர்ந்தன.

சாக்கை திருவிழா
கோடை விழாக்களில் அம்மன் கோயில்களில் நடைபெறும் சாக்கைத் திருவிழா மிக முக்கியமான திருவிழா. இது சித்திரை வைகாசி மாதங்களில் கிராமங்களில் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெறும். ஊர்மக்கள் இந்தத் திருவிழாவில் ஒன்றாகக் கூடுவார்கள். மாலை நேரங்களில் சாக்கைக் கூத்து நடைபெறும். கரகம் சுமந்து, பால் குடம் எடுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்வர். கூழ் வார்த்தல் நடைபெறும். நிறைவு நாளில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். ஆடலும் பாடலும் என கிராமத்து கலைகளுடன் விடிய விடிய நடைபெறும். இது வசதிக்கேற்ற பத்து நாட்கள் முதல் ஐந்து நாட்கள், மூன்று நாட்கள், ஒரே நாள் என்று நடைபெறும்.

சாக்கைக் கூத்து
சாக்கைக் கூத்து என்பது புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் ஒரு கூத்து வகையாகும். இக்கூத்தினை ஆடுபவர் சாக்கையர் எனப்படுவர். பண்டைத் தமிழகத்தில் ஆடப்பட்டு வந்த இக்கூத்து இன்றும் நடைபெற்று வருகிறது. காத்தவராயன் கதை, அரிச்சந்திரன் கதை என பல புராணக் கதைகள் இதில் இடம்பெறும். சாக்கைக் கூத்து நடைபெறும் இடத்தை “கூத்தம்பலம்” என்று கூறுவர். இது கோவில் அல்லது பொது இடத்தில் உள்ள தனிக் கட்டடமாகும். இவ்வம்பலத்தில் சாக்கையன் எனப்படுவோன் முக்காலி மீது அமர்வான். அவன் தலையில் விநோதமான சரிகைத் தலைப்பாகை காட்சி தரும். ஓரத்தில் பல நிறங்கள் அமைந்த அகலத்தில் குறுகிய நீண்ட ஆடையை இடுப்பைச் சுற்றிலும் அணிந்திருப்பான். அவ்வாடை கணக்கற்ற மடிப்புகளை உடையதாகவும் கண்களைக் கவரும் வகையிலும் இருக்கும்.

வெயிலும் மழையும்
வெயிலும் மழையும் உலகுக்கு இரண்டு கண்கள். சூரியஒளி (வெயில்) இல்லாவிட்டாலும் உலகம் மாண்டு விடும். மழை பொழியாவிட்டாலும் பூமியில் புல்கூட முளைக்காது. உயிர்கள் தழைக்காது. உயிர் வாழ இந்த இரண்டும் தேவை. இந்த இரண்டையும் மனிதன் தானே படைத்துக் கொள்ள முடியாது. படைத்தவனை (படைத்தவளை)த் தான் நம்பி இருக்க வேண்டும்.
அதிலும் நம்முடைய சமூகம் தெய்வத்தை தாய் நிலையில் வைத்துப் போற்றுகிறது. தாய் தன் குழந்தைக்கு வேண்டுவனவற்றைத் தருவதைப்போல, தாய் தெய்வங்களும் இந்த உயிர்களுக்குத் தேவையானவற்றைத் தருவதால், இறைவனைத் தாயாக நினைத்து, அம்மன் வடிவத்தில் வழிபடுவது இங்கே மரபாக இருக்கிறது.
மழையைத் தருகின்ற அம்மன் என்பதால் மாரியம்மன் என்ற பெயரோடும், வெயிலைத் தரும் தெய்வம் என்பதால் காய்ச்சல்கார அம்மன் என்ற பெயரோடும் பல அம்மன் கோயில்கள் இருக்கின்றன. அங்கே எல்லாம் கோடை விழாக்கள் நடைபெறுகின்றன. குளிர்ந் தாளம்மன், முத்துமாரி அம்மன் பச்சையம்மன் வெக்காளியம்மன் என்று பல அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன.

வெயில் நோய்களும் அம்மன் பிரசாதமும்
கோடைகாலத்தில் மட்டும் பிரத்யேகமாக அம்மன் ஆலயங்களில் விழா என்பதற்கு காரணங்கள் உண்டு. கோடை காலத்தில் வெப்ப நோய்கள் அதிகம் தாக்கும். அதுவும் சித்திரை கடைசி சில நாட்களும் வைகாசியில் முதல் சில நாள்களும் வெப்பம் அதிகரிக்கும். அக்னி நட்சத்திர நாள்களல்லவா? அம்மை, தோல் நோய்கள், கண் நோய்கள், வயிறு சம்பந்தமான அஜீரணம், போன்ற வெப்ப நோய்களும் தொற்று நோய்களும் அதிகம் தாக்கும். இந்த நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றவே அம்மன் கோயில்களைக் கட்டி வைத்தார்கள்.

வேப்பிலைக்காரி
வேப்பிலை மற்றும் கூழ் ஆகியவை தமிழ்நாட்டில், அம்மன் வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேப்பிலை அம்மனுக்கு ஒரு சிறப்பு ஆடையாகவும், கூழ் ஒரு முக்கிய படையலாகவும் பயன் படுத்தப்படுகிறது. வேப்பிலை வாசலில் வைத்து, அம்மனை வழிபடுவதால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. வேப்பிலையை ஆடையாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுத்துவதுண்டு. கேழ்வரகு, கம்பு, போன்ற தானியங்களை அரைத்து தயிர் சேர்த்துத் தயாரிக்கப் படும் கூழ், ஒரு பாரம்பரிய உணவு ஆகும்.
1. நோய்தீரும் மருந்து (medicine) வேப்பிலை, கூழ்
2. மருந்தகம் (hospital) அம்மன் ஆலயங்கள்,
3.மருத்துவர் (Doctor) அம்மன்.

கோடை உஷ்ணமும் சம்சார உஷ்ணமும்
கோடை உச்சத்தில் இருக்கும் பொழுது உடம்பு வேர்க்கிறது. தாகம் எடுக்கிறது. உடம்பு வாட்டம் கண்டு நிழலைத் தேடுகிறது. உடம்புக்கு ஏற்படும் அத்தனைத் துன்பங்களும் மனதிற்கும் ஏற்படுகிறது. நிழல் தேடி அலைகிறது. குளிர்ச்சியைத் தேடி ஓடுகிறது.
இவை இரண்டையும் தர அம்மன் ஆலயம் கோடை விழாக்களை நடத்தி அழைக்கிறது. இந்த அம்மனுக்குத்தான் எத்தனை பெயர்கள்? கருமாரியம்மன், முத்து மாரியம்மன், வெக்காளியம்மன், வெயில் உகந்த அம்மன், காய்ச்சல்காரம்மன், மழைக்கு மாரி அம்மன், காளியம்மன், திரௌபதி அம்மன், தீப்பாய்ந்த அம்மன், பேச்சியம்மன், பெரிய அம்மன், தண்டு மாரியம்மன், ஏழை மாரிஅம்மன், சுந்தரமாரி அம்மன், பனை அழகியம்மன், இப் படிப் பல பெயர்கள். அம்மன், கோடை வெயிலில் வரும் நோயிலிருந்து மட்டும் காக்கவில்லை. சம்சார (உலக வாழ்க்கை) உஷ்ணத்திலிருந்தும், தீவினையின் உஷ்ணத்திலிருந்தும் காப்பாற்றுகிறாள்.

Related Stories: