புராணத்தில் அக்னி நட்சத்திரம்

நம் வாழ்வில் சந்திக்கும் சில நிகழ்வுகளில்கூட ஏதாவது ஒரு புராணமோ அல்லது இதிகாசமோ தன் பங்கை அளித்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. பின் வரும் நிகழ்வே அதற்குச் சான்று.
பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் இதிகாச கால யமுனையில், மகிழ்ச்சியாக நீராடிவிட்டு வந்து கொண்டிருந்தனர், அர்ஜுனனும் கிருஷ்ணனும். அவர்கள் வழியில் திடீரென வந்து நின்றார் முதிய அந்தணர் ஒருவர், “உங்கள் இருவரின் உதவியும் எனக்கு இப்போது மிகவும் தேவை!” என்றார்.
“என்ன உதவி வேண்டும்? உடனே கூறுங்கள்!” என்று பொறுமையிழந்தான் பார்த்தன்.
“துர்வாச முனிவர், சுவேதசி என்ற மன்னனுக்கு வேண்டிப் பல வருடங் களாகச் செய்த யாகத்தில், குடம் குடமாக ஊற்றிய ஏராளமான நெய்யை நான் குடித்துவிட்டதால், மிகவும் மந்தமான கிழட்டு உருவம் அடைந்து துன்புறுகிறேன். பிரம்மாவிடம் இது மறைய வேண்டிய வழி கேட்டேன். அவர், இதோ இந்த அடர்ந்த காண்டவ வனத்தில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட அரிய ஏராளமான மூலிகைகளை உண்டால் எனது வியாதி சரியாகிவிடும் என்றார். ஆனால், ஒவ்வொரு முறையும் நான் காட்டிற்குள் நுழையும் போதும், இந்திரன் அவன் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த வனத்தில் பெருமழையைப் பொழியச் செய்கிறான். மூலிகைகள் செழித்து வளர வேண்டி! நீங்களே அந்த மழையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இது இந்த அக்னி தேவனின் வேண்டுகோள்!” என்றுகூற அர்ஜுனன் வியப்புடன் கிருஷ்ணனை நோக்கினான். நம்ப முடியாமல், எதிரில் நிற்பவர் அக்னி தேவன் என்றதை உணர்ந்ததும், கிருஷ்ணனோ…
“உன்னைப் பார்த்ததுமே நீ யாரென்று அறிந்துகொண்டேன்” என்று கூறிய படியே அர்ஜுனனை நோக்க, அவன் அக்னி தேவனைப் பார்த்து,
“அக்னி தேவனே! உமக்கு நிச்சயமாக நாங்கள் உதவுகிறோம்! ஆனால் நாங்கள் நீராட மட்டுமே இங்கு வந்தோம். எங்களுக்கு வேண்டிய வில் அம்பு முதலிய ஆயுதங்களை நீங்கள் கொடுத்தால் உதவச் சித்தமே!” என்றான்.
“அவ்வளவுதானே! இதோ” என்று கண்மூடி அக்னிதேவன் மந்திரம் ஜபித்து முடிக்கவும், காண்டீபம், அம்பறாத்துணி நிறைய அம்புகள் மற்றும் சில ஆயுதங்கள் வந்து சேர்ந்தன. அர்ஜுனன் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான். இப்பொழுது கிருஷ்ணன்,
“அக்னி தேவனே! வனத்திற்குள் சென்று வேண்டிய மட்டும் செடி கொடிகளைத் தின்று உன் பசியாற்றிக் கொள். என்ன செய்ய வேண்டும் என்று அர்ஜுனன் பார்த்துக் கொள்வான். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை” என்றுகூறி கிருஷ்ணன் நிறுத்தியவுடன், சிறிது கலக்கத்துடன் நோக்கினான், அக்னிதேவன்.
“இருபத்தியோரு நாட்களுக்குள் நீ உன் வேலையை முடித்துவிட வேண்டும்” என்று கிருஷ்ணன் சொன்னதும், அரைகுறையாகத் தலையசைத்து விட்டுக் காண்டவ வனத்திற்குள் புகுந்து அங்கு இருக்கும் எல்லாவற்றையும் எரிக்க ஆரம்பித்தான் அக்னிதேவன்.
இதனைக் கண்ட இந்திரன், மழைக்கு அதிபதியான வருணனிடம்கூறி பெருமழையை காண்டவ வனத்தில் பெய்யப் பணித்தான். கிருஷ்ணன், அர்ஜுனனிடம் ஜாடை காட்டி, நிறைய அம்புகளை எய்து, காண்டவ வனம் மேற்பகுதி முழுவதும் பெரிய சரக்கூடு ஒன்றை அமைத்து, ஒரு துளி மழைநீர்கூட உள்ளே விழாமல் தடுத்துவிட்டான். மகிழ்ச்சியுடன் அக்னிதேவனும் தன் ஏழு நாவுடனும் வனத்தை சக்தியுடன் எரிக்க ஆரம்பித்தான். வனத்தை முழுவதும் இருபத்தியோரு நாட்கள் எரித்து முடித்து, நோய் நீங்கி வெளியே வந்து கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் வணங்கி, விடைபெற்றுச் சென்றான் அக்னிதேவன்.
வனத்தை எவ்வாறு எரித்தான்?
முதல் ஏழு நாட்களில் மேல்பகுதியில் இருந்த சிறிய மூலிகைகளை எரிக்க ஆரம்பித்தான். அந்த நேரத்தில், வெப்பம் மெதுவாகப் பரவ ஆரம்பித்தது. அதுவே அக்னி நட்சத்திரத்தின் ஆரம்ப காலம்.
இரண்டாம் ஏழு நாட்களில் மிகப் பெரிய மரங்களையும், செடிகொடிகளையும் எரித்தான். மிகப் பெரிய ஜுவாலையுடன்! இந்தக் காலமே அக்னி நட்சத்திரத்தின் உச்சகாலம். நம்மை வாட்டி வதைக்கும் காலம். நீரை அதிகம் குடிக்க வைக்கும் காலம். மனிதனின் தொண்டை வறண்டுபோகும் காலம்.
கடைசி ஏழு நாட்களில் வெப்பத்தை மிகவும் குறைத்து, மீதமிருக்கும் சிறிய மூலிகைகளையும் செடி கொடிகளையும் எரித்தான். இதுவே வெப்பம் குறைந்த அக்னி நட்சத்திரக் காலம். நாமும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக விடுபடும் காலம்.
இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை மூன்று ஏழு நாட்களாகப் பிரித்து தன் தேவைக்கேற்ப எரித்த மொத்தம் இருபத்தியோரு நாட்களையே நாம் பூமியில் அக்னி நட்சத்திர காலம் என்றுகூறி அல்லல் படுகிறோம். இந்த நிகழ்வு மகாபாரதத்திலும் கூறப்பட்டுள்ளது.
விஞ்ஞானம் கூறுவது
பூமி, கார்த்திகை நட்சத்திரத்தின் பாதையில், சூரியனுக்கு மிக அருகில் சஞ்சரிக்கும் இருபத்தியோரு நாட்களே அக்னி நட்சத்திரக் காலம். கார்த்திகை நட்சத்திரம் மிகவும் வெப்பமானது. அதன் அதிபதி அக்னி. அதனால்தான் இருபத்தியேழு நட்சத்திரங்களில் `அக்னி நட்சத்திரம்’ என்று தனியே இல்லை. கார்த்திகையே மறைமுகமாக அக்னி நட்சத்திரமாக உள்ளது. எப்படியானாலும், துன்பப்படுவது நாம்தான் இல்லையா? இந்த வருடம் அந்தக் கொடுமையான காலம் மே மாதம் நான்காம் தேதி துவங்கி இருபத்தி எட்டாம் நாள் வரை இருக்கும். எப்பொழுதும் கடைசி மூன்று நாட்கள் வெப்பம் குறைய ஆரம்பிக்கும் காலம்.
அக்னி நட்சத்திரக் காலத்தில் வீடு கட்டுவது, கிணறு வெட்டுவது, மரம் வெட்டுவது, வாஸ்து பூஜை செய்வது கூடாது. மாரியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து பானகம், நீர் மோர் வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு காலணி, குடைகள் வழங்குவது, ஏழை எளியவர்களுக்கு தயிர் சாதம் வழங்குவது போன்ற நற்செயல்கள், வெம்மை நோயிலிருந்து விடுதலை தரும். எல்லாவற்றிற்கும் மேலாக, கீழ் வரும் சூரிய காயத்ரியைச் சொல்லி ஆதவனை வணங்கிவர, வெப்பநோய், கண், தோல் பிரச்னைகள் மறைந்து, நலம் பெறலாம்.
சூரிய காயத்ரி
“ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்தோ சூரிய பிரசோதயாத்”
எதையும் அளவுக்கு மீறி உண்டால் துன்பமே என்று இறைவனே உணர்த்திவிட்டார் இல்லையா? அக்னிதேவனுக்காவது கிருஷ்ணனும் அர்ஜுனனும் இருந்தார்கள். நமக்கு? எச்சரிக்கையுடன் இருப்போம்! அளவோடு உண்டு மகிழ்வோம்!

Related Stories: