தாவரம் எனப் பெயர் ஏன்?
மனித உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குவது காற்று, அந்தக் காற்றை முறையாக சுத்தமாக்கி, மனிதர்களுக்கு சத்துக்கள் நிறைந்த பரிசுத்தமான காற்றாக மாற்றித் தருவதுடன், மழை, மண்வளம் போன்றவற்றிற்கும் ஆதாரமாக விளங்குவது மரங்கள் மட்டுமே, மனித உயிர் மேம்பட்டு வாழ அவை வரம் தருவதால் அதற்கு “தா வரம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு சில மரங்கள் மனித இனத்திற்கு மிகவும் பாதுகாப்பாக இருந்து மனித இனத்தை விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் எனவும் முன்னோர்கள் அழைத்தனர்.
தல மரம் ஏன்?
மரங்கள் (வீடுகட்டுதல்) போன்ற மனித நாகரிகத்திற்கு அதிகமாக தேவைப்பட்டதால், அவைகள் அழிக்கப்பட்ட காலத்தில் அவை அழியாமல் காப்பாற்ற கோயில்களிலும், பூஜையிலும், தாவரங்களையும், விருட்சங்களையும் நமது முன்னோர்கள் புகுத்திவைத்துள்ளனர். எனவே மரங்களை வணங்குவது பகவானை வணங்குவது போலத்தான். அப்படி நினைத்து வணங்க வேண்டும். ஒவ்வொரு நட்ஷத்திரத்திற்கும் ஒரு மரம் ஒரு செடி உண்டு. அந்தந்த நட்சத்திர நேயர்கள் அந்தந்த மரத்தையும் செடியையும் வளர்ப்பதிலும் வணங்குவதிலும் தங்களுடைய தோஷங்களை நீக்கிக்கொள்ளலாம்.
வனம் தரும் வரம்
தரிசனங்களிலேயே மிக உயர்வானது விருட்ச தரிசனம். காலையில் எழுந்தவுடன் மரங்களைப் பாருங்கள். பறவை சப்தங்களைக் கேளுங்கள். மனம் புத்தெழுச்சி கொள்ளும். நாம் சில மனிதர்களைப் பார்த்து, ‘‘ஏன் மரம் போல் நிற்கிறாய்?’’ என்று கேட்கிறோம். அது தவறு. மரத்தை விட மனிதன் அதிகம் பயன் தருபவன் அல்லன். நாம் ஆக்சிஜனைச் சுவாசிக்கிறோம். கார்பன்டை ஆக்சைடு வெளியே விடுகிறோம். ஆனால் மரங்கள் நம் கழிவுகளான கரியமில வாயுவைத்தான் எடுத்துக்கொண்டு நாம் உயிர் வாழ்வதற்குரிய ஆக்சிஜனைத் தருகின்றன. அதனால்தான் கம்பன் மரங்களைக் குறிப்பிடும் போது ‘‘தருவனம்’’ என்றான். காடுகள் இல்லாவிட்டால் வீடுகள் எங்கே? மழை எங்கே? மண் எங்கே? உயிர் எங்கே? பயிர் எங்கே?
மரத்தினால் இவ்வளவு பயனா?
ஒரு மரத்தின் மதிப்பு விலை மதிக்க முடியாதது. ஆனால், அதன் உண்மையான மதிப்பை உணர்ந்துகொள்ளப் பொருளாதார ரீதியில் அதை மதிப்பிட வேண்டியிருக்கிறது.இதை டெல்லி கிரீன்ஸ் அமைப்பு செய்திருக்கிறது. ஒரு வளர்ந்த ஆள் ஒரு நிமிடத்துக்கு 7-8 லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறார். அதாவது, ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் காற்றை சுவாசிக்கிறார். இதில் 20 சதவீதம் ஆக்சிஜன். அப்படியென்றால், ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்சிஜனை கிரகித்துக்கொள்கிறார்.2.75 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 6,500. இதைக் கொண்டு கணக்கிட்டால் ஒரு மனிதன் ஒரு நாளைக்குச் சுவாசிக்கும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.13 லட்சம். 2 வளர்ந்த மரங்கள், ஒரு நபருக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஆண்டுக்கு ரூ.23 கோடி.
5000 ஆண்டு பழமையான புளிய மரம்
வழிபடக்கூடிய சில மரங்கள் புனிதமாகப் பார்க்கப்படுவதற்கான காரணம், மிகப்பெரிய துறவிகளுடனான அவைகளின் தொடர்பே. ஆலமரத்தின் கிளைகளில் மார்கண்டேயன் மறைந்து கொண்டதால் இந்த மரம் புனிதமாகக் கருதப்படுகிறது. புத்தரின் பிறப்பு மற்றும் இறப்புடன் சாலா மரம் தொடர்பை கொண்டுள்ளதால் புத்த மதத்தினரால் அது புனிதமான மரமாக கருதப்படுகிறது. திருநெல்வேலி ஆழ்வார் திருநகரியில் பெருமாளைவிட நம்மாழ்வாருக்கு விசேஷம் அதிகம். அவர் யோகத்தில் அமர்ந்த புளிய மரம் 5000 ஆண்டுகளாக இன்னும் இருக்கிறது. அந்த புளிய மரத்தைத் தரிசிக்காமல் வரவே கூடாது. அந்த புளியமரம் தான் ஆழ்வாரின் அருளைப் பெற்றுத் தருகிறது. அந்த ஆழ்வாரின் அருள் தான் பெருமாளின் பூரணமான அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருகிறது. புளிய மரத்தில் செய்யும் விரதத்தை திந்தீரணி கௌரி விரதம் என்று சொல்வார்கள். திந்தீரணி என்றால் புளியைக் குறிக்கும். இந்த விரதத்தால் சனி தோஷம் போகும். கோவில் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜப்பெருமாள் ஆலய தலமரமாக விளங்குவது தில்லை மரமாகும். தில்லை மரங்கள் நிறைந்ததாலேயே தில்லைவனம் என்ற பெயர் பெற்ற ஊர் இது.
தல விருட்சம் தரிசிக்காமல் தரிசனம் நிறைவு பெறாது
ஒவ்வொரு தலத்துக்கும் விருட்சம் உண்டு. அதற்கு தல விருட்சம் என்று பெயர். சிலர் நேராகப் போய் சாமியை மட்டும் பார்த்துவிட்டு வந்து விடுகிறார்கள். அங்குள்ள மூர்த்தியை தரிசிப்பது போலவே, தீர்த்தத்தையும் தல விருட்சத்தையும் நாம் தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும், துளசியை பெருமாளுக்கும், வில்வத்தை மகாலட்சுமிக்கும், சிவபெரு மானுக்கும், வேப்பிலையை அம்மனுக்கும் எனப் பிரித்து வைத்தார்கள். இவைகள் அனைத்துமே மருந்துப் பொருள்கள். மருத்துவன் இறைவன். மருத்துவனை தரிசித்து, மருந்துப் பொருள்களைப் பெறுவதுதான் ஆலய தரிசனம். இதில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
