நரசிம்மரைப் போற்றும்ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம்

ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம்ஸ்ரீ ஈஸ்வர சம்ஹிதையில் உள்ளது. ஸ்ரீ லட்சுமி நரசிம்ம மந்திரங்கள் எண்ணிலடங்காதது. ஆனால்,ஸ்ரீ ருத்ர பகவான்,ஸ்ரீ நரசிம்மனிடம் பெற்ற அனுபவத்தை எல்லாம் விளக்குவதற்காகவே இந்த மந்திர ராஜபத ஸ்தோத்திரம் அருளிச்செய்தார். அஹிர்புத்ந்ய சம்ஹிதையில் இருக்கிறது. அஹிர்புத்ந்யன் என்றால் ஈஸ்வரனுக்கு பெயர். இந்த ராஜபத ஸ்தோத்திரம் மூன்று மத ஆசாரியர்களாலும் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. மிகவும் மங்களகரமானது. இந்த மந்திர ராஜபத ஸ்தோத்திரம் 32 அட்சரங்கள் கொண்ட மந்திரம். இதில் 32 பிரம்ம வித்தைகளும் அடங்கியிருக்கின்றன. 11 பதங்கள் இந்த மந்திரத்தில் உள்ளன.

அதில் ஏகாதச ருத்ரர்கள் 11 ருத்திரர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அந்த பதினோரு பதங்களுக்கும் விவரமாக 11 ஸ்லோகங்களும் ,இறுதியாக ஒரு பலச் சுருதி ஸ்லோகம். 12 ஸ்லோகங்களால் இந்த மந்திர ராஜபத ஸ்தோத்திரம் இருக்கிறது,மூன்று காலங்களிலும் இந்த ராஜபத ஸ்தோத்திரம் யார் சொல்கிறார்களோ, அவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் எண்ணிலடங்காதது. இதனை ஏதேனும் ஒரு நரசிம்மர் சந்நதியில், விளக்கேற்றும் நேரத்தில், சொல்வது மிகுந்த பலனை அளிக்கும்.

அப்படி இல்லாவிட்டால், வீட்டிலே ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்து, இதை மாலை நேரத்தில் சொல்வது, வீட்டிலே செல்வத்தை கொழிக்கச் செய்யும். வறுமை இல்லாத நிலையைத் தரும். எதிரிகள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். அச்சம் என்பதே இருக்காது. மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் இருக்கும். எல்லா உறவுகளும் தேடி வரும். எதிலும் தோல்வி என்பதே இருக்காது. எமன் கூட வருவதற்குத் தயங்குவான்.அதில் உள்ள ஒரு ஸ்லோகம் இது.இதை சாஷாத் ஈஸ்வரனே பார்வதி தேவிக்கு உபதேசம் செய்தார்.

யந்நாம ஸ்மரமணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்!!

எவனுடைய பெயரை நினைத்தாலே, பூதங்கள், பிசாசுகள், ராட்சஸர்கள் நடுங்கி நான்கு திசைகளிலும் போடுவார்களோ, எவனுடைய பெயரைச் சொன்னால், எந்த வியாதிகளும் ஒருவனை கிட்டே கூட அணுகாதோ, எந்த நாமத்தைச் சொன்னால் ஏற்கனவே வந்த தீராத நோய்களும் அவரை விட்டு ஓடி ஒளியுமோ, அப்படிப்பட்ட நரசிம்ம பிரபுவை நான் வணங்குகின்றேன். காரணம் அவன் எமனுக்கு எமன், அவன் திருவடிகளில் “நம:” என்று கூறி, ஆத்ம நிவேதனம் செய்து விட்டால் , அவன் காப்பாற்றி விடுவான்.

நரசிம்மரின் மூல மந்திரமும் அதன் பொருளும்
உபநிடத்தில் உள்ள சக்தி வாய்ந்த மூல மந்திரம்.

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

உக்ரம் என்கிற மந்திரத்தில் நரசிம்மனை உக்கிரமாக சொல்கின்றது. வீரியத்தை உடையவராக இருப்பதால் வீரியம் என்று சொல்கிறது.அவன் தான் மகாவிஷ்ணு என்பதை அடுத்த பதத்தில் காட்டுகிறது. ஆகாயத்தையும் பூமியையும் வியாபித்து நிற்கும் அவற்றைக் காட்டிலும் பெரிதாக பிரகாசிப்பவன் என்பதால் அவனை ஜ்வலந்தம் என்று சொல்லி, எல்லாவிடத்திலும் அவன் நிறைந்திருக்கிறான்;எங்கும் அவனைக் காணலாம்;அவன் முகத்தை எந்த இடத்திலும் பார்க்கலாம் என்பதால் ஸர்வதோமுகம் என்கிறது..

இவரிடம் உள்ள அச்சத்தினால் சூரியன் உதிக்கின்றான். சந்திரன் சொல்படி கேட்கின்றான். வாயு வீசுகின்றான். அக்கினி உஷ்ணம் தருகின்றான்..வருணன் மழையைப் பொழிகின்றான். எனவே இவனை பத்ரம் என்கின்ற சொல்லினால், சர்வ மங்களங்களுக்கும் காரணமானவன் என்று உபநிஷத் சொல்லுகின்றது. ம்ருத்யு ம்ருத்யும் என்பதால் சம்சார துக்கத்தைப் போக்குபவன் என்று பொருளாகிறது.

 

Related Stories: