நாளை என்பது இல்லை நரசிம்மரிடத்தில்…

சோளிங்கர்

சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர், யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தவச்சலர் சுதாவல்லி, தாயார் அமிர்தவல்லி. விஸ்வாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோயில் உள்ளது.

தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்கு தனியாகவும் கோயில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார்.வேலூர் மாவட்டம் அரக்கோணம்- சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோயில் இருக்கிறது.

சிங்கப்பெருமாள் கோயில்

ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். (பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை) என்று பொருள். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடதுகாலை மடித்துவைத்தும், வலதுகாலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார். காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம் – செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

நாமக்கல்

திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து சாளக்கிராம கல்லை (திருமாலின் அனுக்கிரகம் பெற்றது) எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார்.

இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார் அனுமன். கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைக்கமுடியாத நிலையில், என்ன செய்வதென யோசித்தவருக்கு தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள் தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம் அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு நீராடச் சென்றார். அதை கையில் வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினாள்.

அதுபோலவே அனுமன் வராதிருக்க திருமகள் அக்கல்லை கீழே வைத்தாள். அது பெரியதாக விஸ்வரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார்.நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

சிந்தலவாடி

ஒரு பக்தனின் கனவில் தோன்றிய நரசிம்மர், தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூறி, அந்த பக்தனுக்கு காட்சியளித்த தலம் இது. ஹரியாச்சார் என்பவர் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்துவந்தார். அவர் கனவில் ஒருநாள் நரசிம்மர் தோன்றி, தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கவிழ்ந்து கிடப்பதாகவும், தன்மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். இதுகேட்டு வேதனையுற்ற ஹரியாச்சார் கருப்பத்தூர் சென்றார்.

இதேபோல் சலவையாளரின் கனவிலும் தோன்றி சொல்லியிருக்கவே, இருவரும் சேர்ந்து நரசிம்மரை கண்டுபிடித்து, அதை தூக்கிக் கொண்டு திருக்காம்புலியூர் புறப்பட்டனர். பாரம் அதிகமாக இருக்கவே திருக்காம்புலியூருக்கும், கருப்பத்தூருக்கும் இடைபட்ட சிந்தலவாடியில் இருந்த வெங்கட்ரமண ஆலயத்தில் இறக்கி வைத்தனர். பகவான் அங்கேயே பிரதிஷ்டை ஆனதுடன், ஹரியாச்சாருக்கும், சலவையாளருக்கும் காட்சி தந்தார்.திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

Related Stories: