நரசிம்மாவதாரத்தின் பெருமைகள்

நரசிம்மாவதாரத்தின் பெருமைகள்

வைணவ சமய மரபில் எம்பெருமான்ஸ்ரீ மன் நாராயணன் ஐந்து நிலைகளில் இருக்கின்றான். பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற இந்த ஐந்து நிலைகளையும் ஆழ்வார்கள் பாடி இருக்கின்றார்கள். இதில் விபவம் என்பது அவனுடைய அவதாரங்களைப் பற்றிச் சொல்வதாகும். இந்த அவதாரங்கள் மூன்று வகைப்படும்.

1. சாட்சாத் அவதாரம்.

2. சொரூப அவதாரம்.

3. சக்தி ஆவேச அவதாரம்.

இதில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, திருவிக்ரம, ராம, கிருஷ்ணா அவதாரங்கள் சாக்ஷாத் அவதாரங்களாகும். இந்த அவதாரங்களை நாம் உபாசிக்கலாம். வணங்கலாம். இதன் மூலம் பல்வேறு விதமான நன்மைகளைப் பெறலாம். இதில் வராக, நரசிம்ம, வாமன, திருவிக்ரம, ராம, கிருஷ்ண அவதாரங்களுக்கு பல்வேறு கோயில்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. இந்த அவதாரங்களை நாம் அர்ச்சாவதார திருவுருவங்களாக இப்பொழுதும் கோயில்களில் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.

நரசிம்ம அவதாரத்தைப் பற்றி குறிப்பிடும் நூல்கள்

பல புராண நூல்களில் நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவைகளில் சில.

1.பாகவத புராணம், 2.அக்னி புராணம், 3.பிரமாண்ட புராணம், 4.வாயு புராணம் 5.ஹரிவம்சம், 6.பிரம்ம புராணம், 7.விஷ்ணுதர்மோத்தர புராணம், 8.கூர்ம புராணம், 9.மச்ச புராணம், 10.பத்ம புராணம், 11.சிவபுராணம்,12.லிங்க புராணம், 13.ஸ்கந்த புராணம், 14.விஷ்ணு புராணம்

மகாபாரதத்திலும் நரசிம்மரைப் பற்றிய சிறிய குறிப்பு காணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் நான்காவது பரிபாடலில் கடுவன் இளவெயினனார் இரணியன் பிரகலாதன் கதையை பாடியிருக்கிறார். சீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் “இரணியன் பட்டது எம்மிறை எய்தினான்” என்று இரணியனை பற்றிய குறிப்பு ஒன்றை தருகின்றார்.

பிரம்மன் அறிய முயன்ற பிரம்மம்

நாராயணன், நான்முகனை தன்னுடைய உந்தியில் படைத்தான். அதனால் பகவானுக்கு பத்மநாபன் என்று பெயர் ஏற்பட்டது. அவன் இறைவன் உந்திக் கமலத்தில் இருந்து தோன்றினாலும், இறைவனை அறியாதவனாக இருந்தான். அப்பொழுது ஒரு அசரீரி, ‘‘பிரம்மனே! நீ எங்கிருந்து தோன்றினாய் என்பதை உன்னால் அறிய முடியவில்லை. அதை அறிய வேண்டும் என்று சொன்னால் பிரம்மம் ஆகிய என்னை அறிய வேண்டும்” என்று சொல்ல, நான்முகன்,‘‘நீ யார்?” என்று கேட்க, “நான் தான் பிரம்மம்!” என, உடனே நான்முகன்,‘‘நான் உன்னை அறிவது எப்படி?” என்று கேட்டார்.

உடனே அந்த அசரீரி, ‘‘தவம் செய்தால் என்னை அறியலாம்” என்று சொல்லி மறைந்தது. பிரம்மனும் தன்னைப் படைத்தவனைத் தெரிந்துகொள்வதற்காக மிகச்சிறந்த மந்திரமான நரசிம்ம அனுஷ்டுப் மந்திரத்தை ஜெபித்தார். அந்த மந்திரத்தின் அங்கங்கள்தான் இதர மந்திரங்கள் என்று இந்த உபநிஷத் சொல்லுகிறது. அந்த மந்திரத்தில் தான் பிரம்மமாகிய வேதம் நிலை நிற்கிறது. எல்லா தேவர்களும் அந்த மந்திரத்தில் இருக்கின்றார்கள். அதாஸ் பச் யத் ருசமானுஷ்டுபீம் பரமாம் வித்யாம் அங்காந்யந்யே மந்த்ரா: யத்ர பிரம்ம பிரதிஷ்டிதம் என்று அந்த உபநிஷத் போகும்.

ஜெயசெல்வி

Related Stories: