பணி நியமன முறைகேடு, உதவித்தொகை மோசடி, வினாத்தாள் கசிவு; கல்வித் துறையில் ரூ.4,000 கோடி ஊழல்: அமலாக்கத்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்

புதுடெல்லி: கல்வித்துறையில் நடந்துள்ள 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா நிதி முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆசிரியர் பணி நியமனம், கல்வி உதவித்தொகை மோசடி மற்றும் போலி பட்டய சான்றிதழ் தயாரித்தல் எனப் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறின. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக 698 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்ட நிலையில், முறைகேடாக நியமிக்கப்பட்ட 25,000 பேரின் பணி நியமனத்தை 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இது தவிர, இமாச்சல பிரதேசத்தில் உள்ள மானவ் பாரதி பல்கலைக்கழகம் வழங்கிய போலி பட்டயங்கள் தொடர்பாக 387 கோடி ரூபாய் ஊழலும், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மாணவர்களின் பெயரில் கல்வி உதவித்தொகையை சுருட்டிய மோசடிகளும் வெளிச்சத்திற்கு வந்தன.டெல்லியில் செயல்படும் அல்-பலா அறக்கட்டளை மற்றும் அதன் பல்கலைக்கழகம் தொடர்பான முறைகேடுகள் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிறுவனத்தின் தலைவர் ஜவாத் அகமது சித்திக், யுஜிசி மற்றும் என்ஏஏசி அங்கீகாரம் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கி மாணவர்களை சேர்த்ததாக 493.24 கோடி ரூபாய் மோசடி புகாரில் அப்போது கைது செய்யப்பட்டார். மேலும், 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில், இந்தப் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று டாக்டர்களுக்குத் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதில் உமர்-உன்-நபி என்பவர் தற்கொலை படை தீவிரவாதியாக செயல்பட்டது விசாரணையில் அம்பலமானது.

தற்போது, மதன் பூர் காதர் கிராமத்தில் உள்ள 1.15 ஏக்கர் நிலத்தை முறைகேடாக வாங்கியது தொடர்பான இரண்டாவது பணமோசடி வழக்கில், ஜவாத் அகமது சித்திக் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 45 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை வெறும் 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் கணக்கு காட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கல்வித்துறையில் நடந்துள்ள மற்ற முக்கிய முறைகேடுகள் குறித்தும் புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன. டெல்லி பள்ளி உள்கட்டமைப்பு திட்டத்தில் 2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 12,000 வகுப்பறைகள் கட்டியதில் 2,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல், 2024ம் ஆண்டு நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ‘சஞ்சீவ் முகியா’ கும்பல் ரகசிய செயலிகள் மூலம் வினாத்தாளை விற்பனை செய்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறாக கல்வித் துறையில் நடந்த இந்த மெகா ஊழல் வேட்டையின் ஒரு பகுதியாக, இதுவரை நாடு முழுவதும் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வெளிநாட்டு பணப் பரிமாற்றம் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக சம்பாதித்த பணத்தை பதுக்கியது தொடர்பான ஆதாரங்களை அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். முக்கிய குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கல்வித்துறையில் நடந்துள்ள 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா நிதி முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்களின் பெயரில் நடக்கும் இதுபோன்ற குற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories: