ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள் கொரோனா காலக்கட்டத்தை போல வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள்: பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்

 

ஐதராபாத்: மேற்கு ஆசியா போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோலிய பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்திய பிரதமர் மோடி, ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதையும் வெளிநாட்டு சுற்றுலா செல்வதையும் தள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலங்கானாவின் ஐதராபாத்தில் நேற்று ரூ.9,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி பேசியதாவது:
மேற்கு ஆசியா போர் காரணமாக உலக அளவில் பெட்ரோல், டீசல் காஸ், உரங்களின் விலை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்த உலகளாவிய நெருக்கடி காலத்தில் தேசமே எல்லாவற்றுக்கும் மேலாக கருதி, நாம் சில உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், காஸ் போன்ற இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களை தேவைக்கேற்ப மட்டுமே சிக்கனமாக கட்டுப்பாடுடன் பயன்படுத்த வேண்டும். கொரோனா காலக்கட்டத்தை போல வீட்டிலிருந்தே பணியாற்றுவதை மீண்டும் ஊக்குவிக்க வேண்டும். ஓராண்டுக்கு திருமணத்திற்காக தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு சுற்றுலா செல்வதையும் ஒத்திவைக்க வேண்டும். இவை காலத்தின் கட்டாயம். இன்றைய சூழலில் அவசியத் தேவையும் கூட. அப்போதுதான் அந்நிய செலாவணியை சேமிப்பதுடன், மேற்கு ஆசியா போரினால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் நம்மால் குறைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: