லா லிகா கால்பந்து: பார்சிலோனா சாம்பியன்; கடைசி போட்டியில் வீழ்ந்தது மாட்ரிட்

பார்சிலோனா: லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று, பார்சிலோனா எப்சி அணி, ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. லா லிகா கால்பந்து போட்டிகள் ஸ்பெயினில் நடந்து வந்தன. பார்சிலோனாவில் நேற்று நடந்த போட்டியில் பலம் வாய்ந்த பார்சிலோனா-ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. போட்டி துவங்கியது முதல் பார்சிலோனா அணி வீரர்கள் துடிப்புடன் ஆடி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். அதன் பயனாக, 9வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் மார்கஸ் ராஷ்ஃபோர்ட், அணியின் முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார்.

அவரைத் தொடர்ந்து 18வது நிமிடத்தில் பார்சிலோனாவின் ஃபெரன் டோரஸ் மேலும் ஒரு கோல் போட்டு அணியை வலுவாக்கினார். மாறாக, ரியல் மாட்ரிட் வீரர்கள் எவ்வளவோ முயன்றும் ஒரு கோல் கூட போட முடியாமல் தவித்தனர். கடைசியில் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி அட்டகாச வெற்றியை பதிவு செய்தது. 35 போட்டிகளில் பார்சிலோனா அணி 30ல் வெற்றி பெற்று 91 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. ரியல் மாட்ரிட் அணி 35 போட்டிகளில் 24ல் மட்டும் வென்று 77 புள்ளிகளுடன் 2ம் இடமும், வில்லாரியல் அணி 35 போட்டிகளில் 21ல் வென்று 69 புள்ளிகளுடன் 3ம் இடமும் பிடித்தன. பட்டியலில் முதலிடம் பிடித்த பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணி, 2வது முறையாக தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. தவிர, 29வது முறையாக லா லிகா போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் ஹான்சி ஃபிளிக்கின் தந்தை காலமானாதால், அதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரு அணிகளை சேர்ந்த வீரர்களும், கைகளில் கருப்பு நிற பட்டை அணிந்து போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. போட்டி துவங்கும் முன், ஒரு நிமிடம் வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: