இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: அதிரடி கிறிஸ்டியா அட்டகாச வெற்றி

ரோம்: இத்தாலியன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, ரொமேனியா வீராங்கனை சொரானா மைகேலா கிறிஸ்டியா அபார வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் இத்தாலியின் ரோம் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 போட்டி ஒன்றில் ரொமேனியா வீராங்கனை சொரானா மைகேலா கிறிஸ்டியா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா மோதினர். துவக்கம் முதல் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ்டியா, முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார்.

தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சாதுரியமாக ஆடிய அவர் அந்த செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் லாத்விய வீராங்கனை யெலனா ஓஸ்டபென்கோ, ரஷ்ய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா மோதினர். இப்போட்டியில் ஆக்ரோஷமாக ஆடிய யெலனா முன் ஈடுகொடுக்க முடியாமல் அன்னா திணறினார்.

அதனால், முதல் செட்டில் 6-1 என்ற புள்ளிக் கணக்கில் யெலனா எளிதில் வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய அவர், அந்த செட்டையும் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: