நாகையில் இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் நின்ற கப்பலை இழுத்து வந்த விசைப்படகு: 142 பயணிகள் பத்திரமாக மீட்பு

நாகை: இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் நின்ற கப்பலை கயிறு கட்டி விசைப்படகு இழுத்துவந்ததால் 142 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு தனியார் கப்பல் நிறுவனத்தின் சார்பில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை நாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் கப்பல் புறப்பட்டு இலங்கை சென்றடைந்தது. மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையில் இருந்து 142 பயணிகளுடன் நாகை நோக்கி கப்பல் புறப்பட்டது. அப்போது நடுக்கடலில் திடீரென கப்பலின் இன்ஜின் பழுதடைந்தது.இதையடுத்து கப்பல் நங்கூரமிட்டு நடுக்கடலில் நிறுத்தப்பட்டது.

இன்ஜினை பழுது நீக்கும் பணியில் கப்பல் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் இன்ஜினை சரி செய்ய முடியவில்லை. 6 மணி நேரத்திற்கும் மேலாக கப்பலிலேயே பயணிகள் தவித்தனர். ஒரு சில பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர். இதையடுத்து மீனவர்கள் 2 விசைப்படகுகளில் சம்பவ இடத்திற்கு சென்றனர். நாகை துறைமுகம் முன்பு நான்கு 108 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. இதன்பின்னர் மீனவர்கள் பழுதாகி நின்ற கப்பலை கயிறு கட்டி ஒரு விசைப்படகு மூலம் துறைமுகத்துக்கு இழுத்து வந்தனர்.

மற்றொரு படகு பின்னால் இருந்து கப்பலை தள்ளியது. இதனால் மாலை 5 மணிக்கு வர வேண்டிய கப்பல் 6 மணி நேரம் தாமதமாக இரவு 11 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. கப்பலில் நீண்ட நேரம் இருந்ததால் கடல் உப்பு காற்றால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. கப்பலில் மயங்கிய பயணிகளுக்கும் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதனால் நாகை கப்பல் துறைமுகத்தில் நள்ளிரவு 1 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது. 142 பயணிகளும் முழு பரிசோதனைக்கு பின் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: