தஞ்சாவூர் அரசு அலுவலகங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியது வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது

தஞ்சாவூர், மே 8: தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் இயல்பு நிலை திரும்பியது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதற்கான நடத்தை விதிமுறை அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் 15ம் தேதி வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் மார்ச் 15ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதன்படி எம்எல்ஏ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் வழக்கமாக நடைபெறும் ஆர்ப்பாட்டம், மறியல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையம் தொகுதி வாரியாக அறிவித்திருந்த குழுவிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகங்களில் திங்கள்கிழமைகள் தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் முகாம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், எஸ்பி அலுவலகங்களில் நடைபெற்று வந்த குறைதீர் கூட்டம் உள்ளிட்ட அனைத்துக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் மனுக்கள் இடுவதற்கான கலெக்டர் அலுவலகத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இதில் பொதுமக்கள் மனுக்களை இட்டு சென்றனர். மேலும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மாதாந்திர கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 6ம் தேதி மாலை 6 மணி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகம் முழுவதும் முடிவுக்கு வந்தன. இதையடுத்து அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் இயல்பு நிலைக்கு நேற்று (7ம் தேதி) முதல் திரும்பியது. மேலும் வரும் திங்கள்கிழமை முதல் கலெக்டர் அலுவலகங்களில் வழக்கமாக நடைபெறும் வாராந்திர குறைதீர் கூட்டங்கள் உள்ளிட்ட கூட்டங்கள் நடைபெற உள்ளது. எஸ்பி அலுவலகங்களிலும் நடைபெறும் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் நேற்று முதல் இயல்பு நிலை திரும்பியது.

இதையடுத்து நேற்று முதல் அரசு அலுவலகங்களில் வழக்கமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் வழக்கம் போல வரும் திங்கட்கிழமை முதல் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்பதால் அன்று அதிகளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: